தமிழ்நாட்டின் தூத்துக்குடி அருகே குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு புதிய விண்வெளிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
விண்வெளித் துறையில் புதுமைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு அரசு புதிய விண்வெளிக் கொள்கை 2024 உருவாக்கப்பட்டு இருக்கிறது. வலுவான தொழில்துறை உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளிட்டவற்றை முழுமையாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த கொள்ளை உருவாக்கப்படுகிறது.
இந்த கொள்கையின் கீழ் குலசேகரப்பட்டினத்தை சுற்றி உள்ள மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள் ஸ்பேஸ் பே (Space Bay) ஆக ஊக்குவித்து வளர்ச்சியை விரைவுப்படுத்த முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் நான்கு மாவட்டங்களில் வளர்ச்சியை விரைவுபடுத்த நிறுவனங்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. விண்வெளித் துறையில் அதிகரிக்கும் வளர்ச்சி, சீர்திருத்தங்கள், முதலீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விண்வெளி கொள்கையை தமிழ் நாடு அரசு அறிமுகம் செய்கிறது.
விண்வெளிக் கொள்கை தொடர்பாக தொழிற்துறையினர், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. விண்வெளித் துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.