தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வரும் ஈரப்பத காற்று, வட இந்திய பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகியவற்றால் ஏற்படும் காற்று குவிதலால் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. இதன் காரணத்தாலும், அதன் பிறகு நிகழும் வானிலை மாற்றங்களாலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (வெள்ளிக்கிழமை) வருகிற முதல் 14 ஆம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில்,இன்று (வெள்ளிக்கிழமை) தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வார இறுதி நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய கிழக்கு வங்க கடலில் மேலும் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக இன்று முதல் வரும் 14 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“