தமிழகத்தில் மேலும் 5 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது தொடப்பாக மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் அடுத்த மாதம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். அப்போது, புதுக்கோட்டை பல் மருத்துவக் கல்லூரியில் அடுத்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடர்பாகவும் இந்திய பல் மருத்துவக் கவுன்சிலிடம் அனுமதி கோர உள்ளனர்.
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 69ஆவது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற கண்காட்சி மற்றும் ரத்த தான முகாமை அமைச்சர் நேற்று(ஆகஸ்ட் 17) தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை வழங்கப்படுகிறது. தம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சமீபத்தில் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டதால், கூடுதலாக 100 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விரு பல் மருத்துவக் கல்லூரிகளிலும் 200 மாணவர்கள் படிக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 3ஆவது அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்குள் கட்டுமானப் பணிகள் முடிவடையும். அடுத்த ஆண்டு 50 மாணவர்கள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த மாதம் (செப்டம்பர்) டெல்லி சென்று இந்திய பல் மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி பெறப்பட உள்ளது.
அடுத்த மாதம் முதல் வாராத்தில் டெல்லி சென்று தமிழ்நாட்டின் தென்காசி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது தொடர்பான மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளோம்.
தற்போது ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகளை விரைந்து முடிக்க கோரி வைப்போம்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil