தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத் துறை சென்னை டூ மதுரை வரை 3 நாள் சுற்றுலா அழைத்து செல்லும் ஜல்லிக்கட்டு டூர் பேக்கேஜ் அறிமுகம் செய்துள்ளது. ஜனவரி 16ஆம் தேதி முதல் 3 நாள் பயணம் தொடங்குகிறது.
மதுரையில் உள்ள கலாச்சார, ஆன்மீக இடங்களை கண்டு ரசித்து பொங்கல் கொண்டாடுவதுடன், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டையும் காண முடியும்.
ஜனவரி 16 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு சென்னை சுற்றுலாத் துறை வளாகத்தில் இருந்து பயணம் தொடங்குகிறது. மறுநாள், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுலாப் பயணிகள் முன் வரியில் அமர்ந்து பார்க்க முடியும். அடுத்து, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
மூன்றாவது நாளில், பயணிகள் சென்னை திரும்பும் வழியில் வரலாற்று சிறப்புமிக்க அழகர் கோவில் மற்றும் பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் ஆகியவற்றிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இந்த 3 நாள் சுற்றுலா பயணத்திற்கு ஒரு நபருக்கு ரூ.7,900க்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த பேக்கேஜில் போக்குவரத்து, தங்குமிடம், உணவு மற்றும் வழிகாட்டி ஆகியவை வழங்கப்படும். தமிழரின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு அழைத்து செல்லப்படுவதால் இந்த டூப் பேக்கேஜ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஆர்வத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.