Kilambakkam: சென்னை நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்து முனையத்தில் இருந்து தான் அரசு பஸ்களும், ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், ஆம்னி பேருந்துகள் மட்டும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், மறுஉத்தரவு வரும் வரை கோயம்பேட்டை சுற்றியுள்ள பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கலாம் என உத்தவிரவிட்டது.
மேலும், போரூர் மற்றும் சூரப்பேடு டோல் சுங்கச்சாவடி நிறுத்தங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி இறக்கவேண்டும் என்றும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லாமல் இயக்கப்பட கூடாது என்றும் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா இடைக்கால உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
அறிவுறுத்தல்
இந்த நிலையில், போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும், சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது என்றும், ஆம்னி பேருந்துகள், தங்களது பேருந்து பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களை குறிப்பிட வேண்டும்" என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் பயணிகளின் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பின்னர் அதனை எதிர்த்து ஒரு சில ஆம்னிப் பேருந்துகளின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 09.02.2024 அன்று ஒரு இடைக்கால உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஏற்பாடாக வழக்கு தொடுத்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை புறவழிச்சாலையில் உள்ள போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி ஆகிய இரு இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் சென்னை மாநகருக்குள் உள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளுக்கு வாகனங்களை கொண்டு வருவது குறித்து குறிப்பிட்டுள்ளதை ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தவறாகப் புரிந்துக்கொண்டு அந்தப் பணிமனைகள் அமைந்துள்ள இடங்களிலும் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என தவறான ஒரு கருத்து உருவாக்கத்தை அனைத்து ஊடகங்கள் வாயிலாக பொது மக்களிடையே தவறான செய்திகளை பரப்பி வருவது குறித்து இந்த துறையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பொதுமக்களை ஏற்றி இறக்குவதற்கு உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. எனவே இதனை தவறான கண்ணோட்டத்துடன், தங்களது லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஆம்னி பேருந்துகளின் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அவ்வாறு செய்வது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாகும் செயல் எனவும் தெளிவுப்படுத்தப்படுகிறது.
எனவே, சென்னை உயர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளவாறு சென்னை புறவழிச்சாலையில் அமைந்துள்ள போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகள் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்கும் இடங்களாக தங்களது பேருந்து பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் குறிப்பிட பட வேண்டும் எனவும் பிற இடங்களை குறிப்பிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் இந்த தவறான புரிதலின் காரணமாக பொதுமக்களிடையே தேயைற்ற குழப்பத்தினை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில் பயணிகளும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதை தவிர்க்குமாறும் கேட்டுகொள்ளப்படுகிறது.
அதனை மீறுவதால் பயணிகளுக்கு தேவையற்ற சிரமங்கள் ஏற்படும் என்பதையும் மேலும் அத்தகைய நடவடிக்கை ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததை கேள்விக்குறியாக்கும் செயல் ஆகும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் பணிமனைகளை ஒருபோதும் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாகவோ அல்லது பேருந்து நிலையமாகவோ பயன்படுத்த இயலாது.
மேலும், சென்னை உயர் நீதிமன்றம் தனது 01.02.2024 அன்று பிறப்பித்த ஒரு இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ளவாறு கிளாம்பாக்கம் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பின்னரே ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்த அறிய இயலும் என்பதாலும் அப்போது தான் அதற்கு ஏற்றவாறு அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என்பதையும் பொதுமக்களும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.