தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் எனக் கோரி தொழிற்சங்கத்தினர் போக்குவரத்துத் துறை செயலருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த வாரம், நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் “போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக தமிழக முதல்வர் முடிவு எடுத்து அறிவிப்பார். தீபாவளி போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் மனு அளித்துள்ளார்கள். எனவே, விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்” என்று கூறியிருந்தார்.
ஆனாலும், அதற்கான அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில், தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்க வேண்டும் எனக் கோரி போக்குவரத்து துறை செயலருக்கு, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கங்கல் கடிதம் எழுதினர்.
இது தொடர்பாக தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 9 சங்கங்கள் சார்பில் போக்குவரத்துத் துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 2007-ம் ஆண்டு டிச.12-ம் தேதி போனஸ் கணக்கீட்டுக்கான உச்சவரம்பை ரூ.3,500 என உயர்த்தி மத்திய அரசு சட்டத் திருத்தம் செய்தது. ஆனால், அதற்கு முன்பு அக்டோபர் மாதமே கணக்கீட்டுக்கான உச்சவரம்பை உயர்த்தி தி.மு.க அரசு கூடுதல் போனஸ் வழங்கியது என்பதை கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.
இதைத் தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு போனஸ் கணக்கீட்டுக்கான உச்சவரம்பை ரூ.7 ஆயிரம் அல்லது அந்த மாநிலத்தில் அட்டவணை தொழிலில் உள்ள குறைந்தபட்ச ஊதியம் இதில் எது அதிகமோ, அதை கணக்கிட்டு போனஸ் வழங்க வேண்டுமென சட்டத் திருத்தம் செய்தது. தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து தொழில் மட்டுமே அட்டவணை தொழிலில் உள்ளது. மற்ற துறை ஊழியர்களோடு ஒப்பிட்டு போனஸ் கணக்கிடுவது தவறு எனவும் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறோம்.
மேலும், 2004-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா பேரிடர் சூழல் காரணமாக 2020, 2021-ம் ஆண்டுகளில் 10 சதவீதமாக போனஸ் தொகை குறைக்கப்பட்டது. இதை அரசு மற்றும் நிர்வாக நலன் கருதி தொழிலாளர்கள் பெற்றுக் கொண்டனர். அதே தொகையை 2022-ம் ஆண்டும் வழங்கியதால், தொழிலாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, மேற்கூறிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டுக்கான போனஸாக 20 சதவீதம் வழங்க வேண்டும். போனஸ் கணக்கிடும்போது குறைந்தபட்ச கூலி சட்ட அடிப்படையிலான சம்பளத்தை கணக்கீட்டுக்கான தொகையாக கணக்கிட்டு போனஸ் வழங்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை 4% உயர்த்தி ஜூலை முன் தேதியிட்டு (01.07.2023 முதல் 42% -இல் இருந்து 46% ஆக உயர்த்தி) அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் 4% அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி உள்ளதால், அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களும் 20% போனஸ் என்ற தங்கள் கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“