Advertisment

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களும் இங்கே தரப்படுகிறது.

author-image
WebDesk
New Update
TN Urban Local Body Elections, local body polls Everything you need to know, dmk, aiadmk, congress, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை, திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக, பாஜக, சிபிஐ, சிபிஎம், vck, bjp, cpi, cpm, pmk, mnm, naam tamilar katchi

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், பிப்ரவரி 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

Advertisment

ஆளும் திமுக, எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், நாம் தமிழர் கட்சி, பாமக, மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்பட மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. 2011ம் ஆண்டு வெற்றிபெற்றவர்களின் பதவிக்காலம் 2016ல் முடிவடைந்தாலும், பல்வேறு சட்டச் சிக்கல்கள் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னை, பழங்குடியினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கவில்லை, எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு தயாராக போதிய அவகாசம் அளிக்காமல் அவசர அவசரமாக தேர்தலை அறிவித்ததாக பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2019-ல் ஊரக உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு, அக்டோபர் 2021-ல் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இந்த ஆண்டு ஜனவரி 28ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. கோவிட்-19 மூன்றாவது அலை காரணமாக தேர்தல்களை நடத்துவதற்கான தேதியை அறிவிப்பதில் இருந்து மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது. மத்திய அரசு வெளியிட்டுள்ள கோவிட் நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி மாநில அரசும் மாநிலத் தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்தலாம் என்று நீதிபதிகள் அமர்வு கூறியது. மேலும், தேர்தல் நடத்துவதை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று உயர்நீதிமன்றம் கூறியது.

கடந்த ஆண்டு ஒன்பது மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஸ்வீச் செய்து வெற்றியைப் பதிவு செய்த ஆளும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக சிபிஐ, சிபிஎம் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

சீட் பங்கீடு தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் இணைந்து போட்டியிடுகிறது.

மறுபுறம், 2019 முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) பாஜகவுடன் கூட்டணி வைத்து மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சியான அதிமுக, இந்த முறை தனது கூட்டணியை முறித்துக் கொண்டது.

தமிழகத்தில் அடிமட்டத்தில் கட்சியை வலுப்படுத்தவும், பாஜகவை வீடு வீடாக கொண்டு சென்று சேர்க்க தங்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். இருப்பினும், அதிமுக தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் என்றும், 2024 மக்களவைத் தேர்தலை ஒன்றாகச் சந்திக்கும் என்றும் அவர் கூறினார்.

இதேபோல், மாநில சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கைகோர்த்த பாமக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இதற்கு முந்தைய 2021ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்துப் போட்டியிட்டது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட கேப்டன் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக இம்முறை தனித்துப் போட்டியிடுகிறது.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மற்ற கட்சிகளும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன.

வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ம் தேதி தொடங்கியது. வேட்பாளர்கள் பிப்ரவரி 4ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5ம் தேதியும், வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி. இதையடுத்து, பிப்ரவரி 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும். கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் அல்லது ஏதேனும் அறிகுறிகள் உள்ளவர்கள் வாக்குப்பதிவின் கடைசி ஒரு மணி நேரத்தில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யலாம். பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் வாக்குப்பதிவு நிறைவடைந்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள்/கவுன்சிலர்கள் மார்ச் 2ம் தேதி பதவியேற்பார்கள்.

மார்ச் 4ம் தேதி மறைமுகத் தேர்தல்

மாநகராட்சிகளில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கும், நகராட்சிகள் மற்றும் டவுன் பஞ்சாயத்துகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கும் மார்ச் 4 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 31,029 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னையில் மட்டும் 15 மண்டலங்களில் 5,794 பேர் உள்ளனர். அனைத்து முக்கியப் பகுதிகளிலும் வாக்குப்பதிவு சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்.

மாநகராட்சிகளின் பட்டியலும் இடஒதுக்கீடும்

தமிழ்நாட்டில் சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, நாகர்கோவில், காஞ்சிபுரம், கரூர், ஒசூர், மதுரை, சேலம், கும்பகோணம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், சிவகாசி, தஞ்சாவூர் உள்பட மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன.

இதில், சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளின் மேயர் பதவி பட்டியல் வகுப்பு பெண்களுக்கும், ஆவடி மாநகராட்சி பட்டியல் வகுப்பினர் இருபாலருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளில் மேயர் பதவிகள் அனைத்து வகுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் 79 பேரூராட்சிகளில் தலைவர் பதவியை பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இதில் 10 நகராட்சிகள் முதல் எஸ்.சி (பொது), 10 நகராட்சிகள் எஸ்.சி (பெண்கள்) மற்றும் 58 மற்றவை பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நல்லியம் நகராட்சி எஸ்.டி (பெண்கள்) பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 80,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வாக்குப்பதிவை சுமூகமாக நடத்தவும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் 80,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் 1.3 லட்சம் அதிகாரிகள் (ஒரு சாவடிக்கு நான்கு அதிகாரிகள்) ஈடுபடுவார்கள்.

சென்னை மாநகராட்சியின் பங்கு

சென்னை மாநகராட்சி தேர்தலை சுமூகமாக நடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கண்காணிப்பை மேற்கொள்ளவும், மாதிரி நடத்தை விதிகளை அமல்படுத்தவும் குறைந்தது 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தகுந்த ஆவணங்கள், பில்கள் இல்லாமல் அதிக அளவு பணம் அல்லது விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களைத் தடுக்க சென்னை முழுவதும் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

போஸ்டர் ஒட்டக்கூடாது; ரூ. 90,000க்கு மேல் செலவு செய்யக் கூடாது

சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தலுக்கு முன் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை அறிவித்தார். தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, சென்னையில் வார்டு உறுப்பினராக போட்டியிடும் வேட்பாளர் ரூ.90,000 வரை மட்டுமே செலவு செய்ய முடியும் என்று கூறினார்.

அரசியல் கட்சிகள்/தனி வேட்பாளர்கள் பிரசார சுவரொட்டிகளை தனியார் அல்லது பொது சுவர்களில் ஒட்டக்கூடாது. பல்வேறு சாதி, மதம், மொழி சார்ந்த மக்களிடையே கலவரத்தை உண்டாக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்று கட்சிகள் தங்கள் வேட்பாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

வேட்பாளர்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், அவர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் எந்த பிரச்சாரத்திலும் ஈடுபடக்கூடாது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கோவிட்-19 வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Local Body Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment