Tamilnadu-election-commission: வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும், நீக்குவதற்கும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த அக்டோபர் 27ம் தேதி தொடங்கப்பட்டது.
இந்த பணி வருகிற டிசம்பர் 9ம் தேதி வரை நடக்க உள்ள நிலையில், வரும் 2024-ம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் முதல் தேதியில் 18 வயது பூர்த்தியாக உள்ளவர்களும், இதற்கு விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் பெயர் நீக்கமும் செய்து கொள்ளலாம்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் தமிழ்நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, திருத்தங்களை மேற்கொள்ள voter helpline app nvsp.in மற்றும் voters.eci.gov.in ஆகிய இணைய சேவைகளின் மூலம் தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இதேபோல், வருகிற 18 மற்றும் 19ம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்கும் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு பிறகு பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் பணிகள் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெறும். இதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜனவரி 5ம் தேதி வெளியிடப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“