க.சண்முகவடிவேல்
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இந்தியா முழுவதும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதில் கடந்த ஆண்டு தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பணி நியமன ஆணை வழங்கும் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கும் ரோஸ்கர் மேளா திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்தார். அதன் மூன்றாம் கட்டமாக 71 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்று பணி ஆணைகளை வழங்கினார்.
அது தொடர்பாக இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அஜந்தா ஓட்டலில் நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டு ரயில்வே, சுங்கத்துறை, கலால் துறை, விமானத்துறை உள்ளிட்ட மத்திய அரசு துறை சார்ந்த 129 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

‘ரோஜ்கர் மேளா’ என்கின்ற மத்திய அரசின் மெகா வேலைவாய்ப்பு முகாம் மூலம், 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை, 71,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 17ந் தேதி அன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி விழா பேருரை ஆற்றும்போது, இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தார். அதன்படி கடந்த அக்டோபர் 22ந் தேதி 75 ஆயிரம் பேருக்கும் அதன் பின்னர் நவம்பர் 22ந் தேதி 71 ஆயிரம் பேருக்கும் பிரதமர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இன்றைய தினம் மூன்றாவது கட்டமாக நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளார். அதேபோன்று கடந்த டிசம்பர் மாதம் புதிதாக பணியில் சேரும் ஒன்றரை லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் முகாமையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தற்போது புதிதாக வேலையில் சேர்ந்துள்ள இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் தேச முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள்.
75 ஆண்டுகள் முடிந்து சுதந்திர தினவிழா கொண்டாடுகின்ற இவ்வேளையில், தற்போது பணியில் சேர்ப்பவர்கள் இன்னும், 25 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். வருங்கால இந்தியாவை வலிமையாக வழி நடத்துபவர்களாக இருப்பார்கள். 2047-ம் ஆண்டில் நாடு மிகப்பெரிய வல்லரசாக திகழவும், சுய சார்புடன் இருக்கவும் இந்த இளைஞர்கள் பணியாற்ற வேண்டும். மத்திய அரசு வேலை என்றால் எந்த மாநிலத்திலும் சென்று பணியாற்ற முடியும். இந்த வேலை வாய்ப்பு என்பது மத்திய அரசு மட்டுமல்லாது, இந்தியாவில் முழுவதும் ஆட்சி புரியும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளுகின்ற மாநிலங்களிலும், மாநில அளவிலான வேலைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
நாங்கள் போகும் போக்கில் வாக்குறுதிகளை சொல்லிவிட்டு, பின்னர் அந்த வார்த்தைகளை பின்வாங்குபவர்கள் இல்லை. நாங்கள் சொல்லியது சொல்லியபடி, குறிப்பிட்ட நாட்களுக்குள், 10 லட்சம் பேருக்கு நிச்சயம் வேலை வாய்ப்புகளை வழங்குவோம். மத்திய அரசு பணியில் தமிழக இளைஞர்களும் அதிகம் வர வேண்டும்.” இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
முன்னதாக, சுங்க வரித்துறையின் திருச்சி மண்டல ஆணையர் அணில் வரவேற்றார். முடிவில் சுங்கவரித் துறையின் இணை ஆணையர் பிரதீப் நன்றி தெரிவித்தார். மூத்த சுங்கவரித்துறை அதிகாரிகள் மற்றும் வணிகவரித் துறையை சேர்ந்த அதிகாரிகள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil