சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரம் குறித்து அதிமுக, திமுகவினர் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவது தொடரும் நிலையில், கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்றும், இந்தியா - இலங்கை இடையிலான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப் பெறவும் மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்திற்கு பாமக, பாஜக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில் இந்த தீர்மானம் மீதான விவாதத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "திமுக ஆட்சி அமைந்து 4 ஆண்டுகளில் இந்த அரசு கச்சத்தீவு விவகாரத்தில் என்ன செய்தது? தமிழக எம்பி-க்கள் 39 பேர் நாடாளுமன்றத்தில் என்ன வலியுறுத்தியுள்ளனர்? அதனை முதலமைச்சர் விளக்க வேண்டும். 14 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக என்ன செய்தது? வாஜ்பாய் அரசில் கூட அங்கம் வகித்தீர்கள். அப்போது ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நான் பலமுறை பிரதமரை பார்த்த போது வலியுறுத்தியுள்ளேன். 54 முறை கடிதம் எழுதி இருக்கிறேன். தொடர்ந்து அழுத்தம் கொடுத்திருக்கிறோம். நீங்கள் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்கள்.
அப்போது என்ன செய்தீர்கள்? இப்போது கூட டெல்லி சென்று வந்தீர்கள்? அப்போது வலியுறுத்தப்பட்டதா?" என்று பதிலடி கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "இது உணர்வுப்பூர்வமான பிரச்சனை. நமது உரிமையை மீட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், கச்சத்தீவை மீட்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அ.தி.மு.க ஆதரவு அளித்தது.
தமிழ்நாட்டில் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியின் போது கச்சத்தீவை மீட்க என்ன செய்தீர்கள் என்றும் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த போதாவது கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக வலியுறுத்தினீர்களா? " என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, ”நான் முதலமைச்சராக இருந்த போது மீன்வளத்துறை அமைச்சரை டெல்லி அழைத்து சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்தினேன் என்று பதிலளித்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீங்கள் செய்யவில்லை என நாங்கள் கூறவில்லை. அதேசமயம் நாங்களும் செய்திருக்கிறோம்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் கச்சத்தீவு குறித்து மத்திய அரசிடம் பேசியுள்ளோம். மேலும் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒட்டி தான் பேச வேண்டும்” என்றார்.