கச்சத்தீவு மீட்பை வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு தி.மு.க கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தாலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது சரிதான்; காங்கிரஸ் ஒருபோதும் அதை தவறு என சொல்லாது” என்று கூறியது கவனத்தைப் பெற்றுள்ளது.
இலங்கைக்கு கொடுக்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (02.04.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது அவர்களுடைய படகுகள் சிறைபிடிக்கப்படுவதும், தமிழக மீனவர்கள் தாக்குலுக்குள்ளாவதும் மீனவர்களின் துயரம் தொடர்கதையாக உள்ளது. இலங்கை கடற்படையால் இன்னல்களுக்கு ஆளாகிவரும் தமிழக மீனவர்களின் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் எனவும், இந்தியா – இலங்கை இடையேயான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்பப்பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது அமைந்திருக்கிறது. இலங்கையில் எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.
மேலும், “தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் நான் தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டு வருகிறேன். இதுவரைக்கும் மீனவர்கள் கைது, தாக்குதல் குறித்து 74 கடிதங்களை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், பிரதமர் அவர்களுக்கும் எழுதியிருக்கிறேன். பிரதமர் அவர்களை நேரில் சந்திக்கும் போதெல்லாம் இதுகுறித்து வலியுறுத்தியிருக்கிறேன்.
இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான முடிவுகள் எட்டப்பட இயலாமல் கடந்து கொண்டிருக்கிறது. கடிதம் எழுதினால் விடுவிப்பது, பிறகு கைது செய்வதென்று இலங்கை அரசின் நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருப்பதால், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு, பாரம்பரிய மீன்பிடி உரிமை கேள்விக்குறியாகி, கடலுக்குச் சென்றால் பத்திரமாக வீடு திரும்புவார்களா நம் சொந்தங்கள் என்று குடும்பத்தினர் மீளாக் கவலையில் மூழ்கியிருக்க வேண்டிய துயர நிலை ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவு காலத்துக்கு இதனைச் சகித்துக் கொண்டு இருக்க முடியும்? இதுபோன்ற சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவு மீட்பே மிகச் சரியான வழி என்பதை இம்மாமன்றத்தின் வாயிலாக மீண்டும் வலியுறுத்திட விரும்புகிறேன்.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.
“கச்சத்தீவு விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், கச்சத்தீவை மாநில அரசுதான் இலங்கைக்கு அளித்தது போன்று ஒரு தவறான தகவலைப் பரப்பி அரசியல் செய்வது அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகி விட்டது. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக கட்சிகள் செய்யும் அதே தவறை ஒன்றிய அரசு செய்வது வருந்தத்தக்கது; ஏற்கமுடியாதது. கச்சத்தீவைப் பொறுத்தவரைக்கும், அந்தத் தீவைக் கொடுத்து, ஒப்பந்தம் போட்ட போதே முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். தமிழ்நாட்டு மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார். கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்படக் கூடாது என்று அழுத்தந்திருத்தமாக வாதிட்டு இருக்கிறார்.” என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுப் பேசினார்.
“ஒன்றிய அரசு இதனை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தியமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது” என அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியவர் நம்முடைய முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்தான்.” என்று குறிப்பிட்டுப் பேசினார்.
“தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களைப் போக்கிடவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.
இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் இந்திய பிரதமர் அவர்கள் அந்நாட்டு அரசுடன் பேசி, இலங்கை சிறையில் வாடும் நம் நாட்டு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்று இப்பேரவை வலியுறுத்துகிறது என்ற தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
கச்சத்தீவு மீட்பை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்த தனித் தீர்மானத்துக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்தார். அதே நேரத்தில், கச்சத்தீவு மீட்பை வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விவாதங்களை எழுப்பினார். இருப்பினும் இந்த தீர்மானத்துக்கு அ.தி.மு.க உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.
அதே போல, தி.மு.க கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், கச்சத்தீவு மீட்பை வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தாலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது சரிதான்; காங்கிரஸ் ஒருபோதும் அதை தவறு என சொல்லாது” என்று கூறியது கவனத்தைப் பெற்றுள்ளது.
கச்சத்தீவு மீட்பு தீர்மானம் தொடர்பாகப் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது சரிதான்; காங்கிரஸ் ஒருபோதும் அதை தவறு என சொல்லாது; வெறும் 272 ஏக்கர் நீர் இல்லாத அந்த வானம் பார்த்த பூமியைக் கொடுத்துவிட்டு பல லட்சம் ஏக்கர் நிலத்தை இந்தியாவிற்கு பெற்று கொடுத்தவர் இந்திரா காந்தி. இப்போது மீனவர்கள் தங்களது உரிமை என சொல்கிறார்கள்; அதற்காக அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை ஆதரிக்கிறோம்” என்று கூறினார்.