/indian-express-tamil/media/media_files/2025/10/04/whatsapp-image-2025-10-04-19-33-47.jpeg)
Tamilnadu
திருவாரூர்: சம்பா நெல் மூட்டைகள் கிடங்குகளில் தேங்கிக் கிடப்பதால், தற்போது அறுவடை செய்யப்படும் குறுவை நெல்லை இருப்பு வைக்க இடமில்லாமல், கொள்முதல் முடங்கிப் போயுள்ளது என்றும், கடந்த 10 மாதங்களில் 5 முறை மேலாண்மை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) முடங்கிப் போயுள்ளதாகவும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவாரூர் அருகே திருநெய்ப்பேர், மாங்குடி, மாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் கொள்முதல் தடைபட்டு நெல் மூட்டைகள் கொட்டிக் கிடப்பதை பி.ஆர்.பாண்டியன் இன்று (அக். 5, 2025) நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிர்வாக குளறுபடி
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த 10 மாதங்களுக்குள்ளாக ஐந்து முறை மேலாண்மை இயக்குநர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதனால் எந்தவித முன் திட்டமிடலும் இல்லாமல் கழகம் முடங்கிக் கிடக்கிறது.
முன்னதாக கொள்முதல் செய்யப்பட்ட சம்பா நெல்லை உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பாமல் இன்று வரை பல்வேறு கிடங்குகளில் இருப்பு வைத்துள்ளனர். இதனால், தற்போது அறுவடை செய்யப்படும் குறுவை நெல்லை கிடங்குகளில் இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பொது விநியோகத் திட்டத்திற்குத் தேவையான அரிசியை வெளி மாநிலங்களில் கிலோ ரூ.27க்கு கொள்முதல் செய்து, அதை கிலோ ரூ.42க்கு மாவட்ட கிடங்குகளில் இருப்பு வைக்கும் மோசடி நடைபெறுவதாகவும் தெரிய வருகிறது.
கொள்முதல், அறுவடை முடக்கம்
தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை அறுவடைப் பணிகள் துவங்கியுள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலைய வாயில்களில் தலா 5,000 முதல் 15,000 சிப்பங்கள் வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 10,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அறுவடை செய்யப்பட்ட நிலையில், கிராமங்கள் தோறும் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நெல் கொள்முதலும், அறுவடையும் தடைபட்டு விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், புயல் சின்னம் உருவாகி வருகிறது. காய்ந்த நிலையில், தரமாக அறுவடை செய்யப்பட்ட நெல் மழையால் பாதிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அரசின் உடனடி நடவடிக்கை தேவை
எனவே, தமிழக அரசு தாமே பொறுப்பேற்று, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குழுவை உடனடியாக அனுப்பி வைத்து விரைந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், 22% ஈரப்பதம் வரை எந்தவித நிபந்தனையும் இன்றி நெல்லை கொள்முதல் செய்து, உடனடியாக அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைத்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்,” என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, திருவாரூர் மாவட்ட துணைத்தலைவர் எம்.கோவிந்தராஜ், திருவாரூர் ஒன்றிய செயலாளர் பி.அறிவு உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் உடனிருந்தனர்.
செய்தியாளர்: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.