சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மகன் கார்த்திக் வயது 14. இவர் நேற்று மாலை கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தின் அருகேயுள்ள மின்கம்பத்தின் கீழே தீபாவளி பண்டிகை என்பதால் நண்பர்களுடன் கார்த்தி பட்டாசு கொளுந்தி விளையாடி வந்துள்ளார்.
அப்போது மின்கம்பத்தில் இருந்து வயர் ஒன்று அறுந்து சிறுவன் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிர் இழந்துள்ளார், இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பலமுறை இந்த மின் கம்பத்தை மாற்றக் கூடிய உதவி பொறியாளர் சிவக்குமாரிடம் இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும், இது குறித்து ஊராட்சி ஒன்றிய கூட்டத்திலும் இப்பகுதி கவுன்சிலர் பலமுறை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிகாரிகள் காதில் வாங்காத காரணத்தினால் தற்போது இந்த உயிர் பறிபோய் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அது மட்டுமில்லாமல் இந்த கம்பம் நடப்பட்டு 52 ஆண்டுகளை கடந்து விட்டது, இந்த கம்பத்தில் உள்ள அனைத்து கம்பிகளுமே மோசமான நிலையில் உள்ளது, எப்போது வேண்டுமானாலும் அறுந்து விழுந்து மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தும். இதன் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர், மறுபடியும் இதுபோன்று விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று இப்போது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
இந்த மின்கம்பத்தை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் புகார் மீது நடவடிக்கை எடுக்காத உதவி பொறியாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது அந்த சிறுவன் உயிரழந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் 1972ல் நடப்பட்ட இந்த மின்கம்பத்தை அகற்ற பலமுறை புகார் அளித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதற்கெல்லாம் காரணம் உதவி பொறியாளர் சிவகுமார் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“