/indian-express-tamil/media/media_files/OaP5Sj5AW1NAKgOy7XEA.jpg)
மின் இணைப்புகளில் பொருத்தவதற்காக சுமார் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு மின்வாரியம் டெண்டர் கோரியுள்ளது.
மின்நுகர்வை துல்லியமாக கணக்கெடுக்கவும், மின் இழப்பை தடுக்கவும், மின் கணக்கீட்டில் நிகழும் முறைகேடுகளை தடுத்து வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அனைத்து மாநில மின்வாரியங்களையும், மத்திய அரசு அறிவுறுத்தியது. குறிப்பாக, 2026-ம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் திட்டத்தை நிறைவேற்றினால், மத்திய அரசு தரும் நிதியுதவி மானியமாக எடுத்துக் கொள்ளப்படும். தொகையை திருப்பி செலுத்த வேண்டிய தேவையும் இருக்காது. அவ்வாறு தவறும்பட்சத்தில் குறிப்பிட்ட தொகை கடனாக மாற்றப்பட்டு, மீண்டும் அதனை திருப்பி செலுத்த வேண்டிய நிலை உருவாகும். இதற்காக ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்தது.
அதன்படி, கடந்த 2023-ஆம் ஆண்டு, வெவ்வேறு மாவட்டங்களை உள்ளடக்கி, 4 தொகுப்புகளாக பிரித்து 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, அதை 10 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக டெண்டர் விடுக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, 8 மாவட்டங்களில் மட்டும் 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது. இதில், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் பங்கேற்று குறைந்த விலையை குறிப்பிட்டது. எனினும், மின்வாரியம் நிர்ணயித்த தொகையை விட இது அதிகமாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் விரைவில் விடப்படும் என மின்வாரியம் அறிவித்தது.
இந்த சூழலில், அண்மையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் 128-வது வாரிய கூட்டத்தில் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்காக புதிய டெண்டர் விட ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய டெண்டர் விடுவதற்கான அறிவிப்பை மின்வாரியம் இன்று (மார்ச் 12) வெளியிட்டது. இதில், ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்கப்பட உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.