/tamil-ie/media/media_files/uploads/2023/06/Trichy-EB-officer-Sridhar.jpeg)
கலெக்டரை தரக்குறைவாக பேசியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மின்வாரிய அலுவலர் ஸ்ரீதர்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கல்லக்குடி மின் நிலையத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர். இவரிடம் சென்ற அப்பகுதி மக்கள் ‘கல்லக்குடி புதிய சமத்துவபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு மின் இணைப்பு வழங்குங்கள்’ என கேட்டுள்ளனர்.
அதற்கு இளநிலை பொறியாளர், ‘எல்லாம் ஆன்லைனில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டரின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்து கையெழுத்து வாங்கிட்டு வாருங்கள். மின் இணைப்பு தருகிறேன்’ என தரக்குறைவாக பேசியுள்ளார்.
இதையும் படியுங்கள்: நெடுந்தீவு அருகே கடலில் தத்தளித்த 9 மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை: நெகிழ்ச்சி சம்பவம்
மீண்டும் ‘கோயிலுக்கு தானே புண்ணியமா போகும் மின் இணைப்பு கொடுங்க’ என அப்பகுதி மக்கள் கேட்டதற்கு, கலெக்டரின் சட்டையை பிடித்துக்கேளுங்கள்’ என்று இளநிலை பொறியாளர் ஸ்ரீதர் பதில் அளித்துள்ளார்.
அதோடு நிறுத்திக்கொள்ளாமல் ‘கலெக்டர் சட்டையை பிடித்து எழுதி வாங்கி வாருங்கள். நான் அடுத்த நொடியே மின் இணைப்பு தருகிறேன். நீங்கள் வாங்கி வந்தால் உங்கள் கோயிலுக்கு நான் பணம் கட்டுகிறேன். வருமானம் முழுவதும் அவனிடம்தான் உள்ளது.
கோயிலின் பேரில் தடையில்லா சான்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தாரிடம் வாங்கி வாங்க. நான் தருகிறேன் என்றும், கரண்டை விற்பதற்கு தானே இங்கே உட்கார்ந்து இருக்கேன். போங்க போய் கலெக்டரிடம் எழுதி வாங்கிட்டு வாங்க, என இளநிலை பொறியாளர் ஸ்ரீதர் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் இளநிலை பொறியாளர் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் கலெக்டரை தரக்குறைவாக பேசிய இளநிலை பொறியாளர் ஸ்ரீதரை பணி இடை நீக்கம் செய்து மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் பிரகாசம் உத்தரவிட்டுள்ளார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.