கோடைக்கால மின் தேவையை சமாளிக்க 8,525 மெகா வாட் மின்சாரத்தை வெளி சந்தையில் வாங்க தமிழ்நாடு மின் பகிர்மான தளத்திற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் மின் தேவை அதிகரிக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு கோடைக் காலத்தில் தமிழ்நாட்டில் மின் தேவை சுமார் 22 ஆயிரம் மெகா வாட் ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடைக் காலத்தில் ஏற்படும் மின் தேவைஐ ஈடு செய்ய, வெளிச் சந்தையில் தனியாரிடம் இருந்து குறுகிய கால ஒப்பந்தம் அடிப்படையில் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, நள்ளிரவு 12 மணி முதல் மாலை 6 மணி வரை என்ற அடிப்படையில் பிப்ரவரி மாதம் 200 மெகா வாட் மின்சாரமும், மார்ச் மாதம் 250 மெகா வாட் மின்சாரமும், ஏப்ரல் மாதம் 1,200 மெகா வாட் மின்சாரமும், மே மாதம் 600 மெகா வாட் மின்சாரமும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மின் தேவை அதிகமாக இருக்கும், பீக் அவர்ஸ் நேரத்தில், மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரையும் பிப்ரவரி மாதம் 540 மெகா வாட் மின்சாரமும், மார்ச் மாதம் 1575 மெகா வாட் மின்சாரமும், எப்ரல் மாதம் 2340 மெகா வாட் மின்சாரமும், மே மாதம் 1320 மெகா வாட் மின்சாரம் என்ற அடிப்படையில் மொத்தம் 8,525 மெகா வாட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் தனியாரிடம் இருந்து வாங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய்ம் அனுமதி அளித்துள்ளது
இதைத் தொடர்ந்து, மின்சாரம் வாங்குவதற்கு சந்தையில் டெண்டர் விடுவதற்கான பணியை வெளியிட்டு மின்சாரம் உடனடியாக வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.