தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் 15 நாள் பயணமாக இம்மாத தொடக்கத்தில் அமெரிக்கா சென்றார். அமெரிக்கா சென்ற அவர் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் சென்னை அடுத்த மறைமலை நகரில் இயங்கி வந்த ஃபோர்டு தொழிற்சாலையை மீண்டும் இயங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அதனடிப்படையில் தமிழ்நாடு- ஃபோர்டு நிறுவனத்தின் 30 ஆண்டுகால உறவைப் புதுப்பிக்கும் வகையில் மறைமலை நகரில் மீண்டும் தொழிற்சாலை இயக்கப்படும் என ஃபோர்டு நிறுவனம் அறிவித்தது.
அதன்படி, ஃபோர்டு நிறுவனம், ஆலையை மீண்டும் இயக்குவதற்கான இசைவாணை கோரி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் விண்ணப்பித்திருந்தது. தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவு ஆணை கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியான நிலையில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இசைவாணையை 2028 மார்ச் 31 வரை புதுப்பித்து உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“