டிஎன்பிஎஸ்சி தேர்வு கண்காணிப்பாளர் தவறால் துணை ஆட்சியர் பதவியை இழந்தவருக்காக தனி பதவியை உருவாக்கி பணி நியமனம் வழங்குவது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பியாக பயிற்சி பெற்று வந்த பாபு பிரஷாந்த், கடந்த 2017 ஆம் ஆண்டு துணை ஆட்சியர் பதவிக்காக நடத்தபட்ட குரூப் 1 தேர்வில் கலந்து கொண்டு 2 தேர்வுகளை எழுதினார். மூன்றாவது தேர்வில் தவறான பக்கத்தில் எழுதிய விடைகளை அடித்துள்ளார். இதை கவனித்த தேர்வுக் கூட கண்காணிப்பாளர், விடைகளை அடித்த பக்கங்களில் கையெழுத்திட நிர்பந்தித்ததால், அந்த பக்கத்தில் கையெழுத்திட்டார்.
இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டு, 29 பேர் பணிநியமனம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த தேர்ச்சி பட்டியலை எதிர்த்து பாபு பிரஷாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விடைத்தாளில் கையெழுத்திடக் கூறியது தவறு என தேர்வு கண்காணிப்பாளர் வருத்தம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டி, கண்காணிப்பாளர்கள், தேர்வு எழுதுபவர்களை முறையாக வழிநடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ள பாபு பிரஷாந்தின் விடைத்தாளை மதிப்பிட்டு, நேர்முகத் தேர்வு நடத்தி, தகுதி பெற்றால் அவருக்காக புதிய பதவியை உருவாக்கி பணி வழங்குவது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்த நீதிபதி, இந்த உத்தரவு வேறு எந்த வழக்குகளுக்கும் பொருந்தாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.