டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த வினோத்குமார், கடலூரை சேர்ந்த சீனிவாசன், ராஜசேகர் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் முறைகேடுக்கு மூல காரணமாக இருந்த இடைத்தரகர் ஜெயகுமார்,
காவலர் சித்தாண்டி, டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஓம்காந்தன் தொடங்கி நாள்தோறும் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், குரூப் 2ஏ தேர்வில் 9 லட்சம் கொடுத்து வெற்றி பெற்று, வேலூர் மாவட்டத்திலுள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய திருவண்ணாமலையை சேர்ந்த வினோத் குமார் மற்றும் குரூப் 4 தேர்வில் தலா 7 லட்சம் கொடுத்து வெற்றி பெற்ற கடலூரை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
இவர்கள் மூவரும் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று நீதிபதி செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது,
காவல்துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர், விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணையை பாதிக்கும் எனவும் வாதிட்டார்.
அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி மூவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.