டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு முறைக்கேடு புகார் தொடர்பான வழக்கில் வருவாய்துறை செயலாளர், உள்துறை செயலாளர், வணிகவரித்துறை செயலாளர், டிஎன்பிஎஸ்சியின் தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர்களை எதிர் மனுதராக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு 68 பணியிடங்களுக்கு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகவும், அந்த தேர்வை ரத்துசெய்து, மீண்டும் தேர்வை நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விடைத்தாள் வெளியான விவகாரம் பற்றி செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி, பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மேயர் துரைசாமி ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்க்க ஏற்கனவே நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும் இதுகுறித்து விசாரிக்க மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை விசாரணைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராக இருப்பதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாவும், டி.என்.பி.எஸ்.சி ஒத்துழைப்பு வழங்கினால் நான்கு வாரங்களுக்குள் விசாரணையை முடிப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அரசு நிர்வாகத்திலும், ஊழியர் தேர்வு முறையிலும் வெளிப்படைத்தன்மையுடன் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த வழக்கு தொடர்பாக யாரிடம் வேண்டுமானாலும் காவல்துறை விசாரணை நடத்தலாம். இதில் நீதிமன்றம் தலையிடாது. ஆனால் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்க போகும் அதிகாரிகளின் நியமனம் குறித்த உண்மைத்தன்மை வெளிப்பட வேண்டும் என்று நீதிபதி சுப்பிரமணியம் தெரிவித்தார்.
மேலும், விசாரணை தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் வழக்கின் நிலை குறித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த 18 தேதி மூன்று தனியார் பயிற்சி மையங்களில் சோதனை செய்ததில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதன் அடிப்படையில் கடந்த 24 தேதி டிஎன்பிஎஸ்சி அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக பலர் காவல்துறை கண்காணிப்பில் உள்ளதாகவும் விரைவில் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் அதற்கு நீதிமன்றம் குறைந்தது மூன்று மாத கால அவகாசம் வழங்கவேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி ஒரு மாத கால அவகாசம் வழங்கினார். இந்நிலையில் மனுதாரர் கோரிக்கையாக இந்த தேர்வின் மூலம் தேர்வுபெற்றவர்கள் பணிநியமன ஆணை வழங்க தமிழக அரசிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கேட்டார்.
இதனையடுத்து நீதிபதி இந்த தேர்வில் தேர்வு பெற்றவர்களின் பணி நியமனம் என்பது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டு வழக்கின் தேவையை கருத்தில் கொண்டு நீதிமன்றமே தானாக முன்வந்து வருவாய்துறை செயலாளர், உள்துறை செயலாளர், வணிகவரித்துறை செயலாளர், டிஎன்பிஎஸ்சியின் தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர்களை வழக்கின் எதிர்மனுதார்களாக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை நான்கு வார காலத்திற்கு தள்ளிவைத்தார்.