TNPSC group-1 விடைத்தாள் முறைகேடு வழக்கில், மத்திய குற்றப் பிரிவு காவல்துறை, சென்னையை சேர்ந்த 'அப்பல்லோ பயிற்சி மைய' இயக்குனர் சாம் ராஜேஸ்வரனை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், சாம் ராஜேஸ்வரனுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் 8 வாரத்திற்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது. இதை, எதிர்த்து ஏ.டி.சி. ஷ்யாமளாதேவி, ஏ.சி. மகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் செங்குட்டவன் உள்ளிட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரனைக்கு வந்தபோது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், TNPSC க்ரூப்-1 தேர்வில் அப்பல்லோ பயிற்சி மைய இயக்குனர் சாம் ராஜேஸ்வரன் முறைகேடாக மாணவர்களைத் தேர்ச்சி பெற வைத்திருப்பதாக புகார் வந்துள்ளது. அதை, விசாரித்துள்ளோம் எனவும் சென்னை அமர்வு நீதிமன்றம் TNPSC முறைகேடுகள் சமூகத்தில் ஏற்படுத்திருக்கும் தாக்கத்தை உணராமல் முன்ஜாமின் வழங்கியிருப்வதாகவும் அதை ரத்து செய்ய வேண்டும். நாங்கள் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தால்தான் பல முறைகேடுகள் வெளிவரும் என தெரிவித்தனர்.
இதனைக்கேட்ட நீதிபதி, வரும் 20 ஆம் தேதி சாம் ராஜேஸ்வரன் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். அன்றைய தினத்திற்கு வழக்கு தொடர்பாக நேரம் கேட்காமல் வாதிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.