2015-ம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.சி.குரூப் - 1 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய தி.மு.க தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்க தமிழக அரசு, அரசு பணியாளர் தேர்வாணையம், சிபிஐ-க்கும் நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் விடைத்தாள்களை வெளியே எடுத்து திருத்தி, மோசடி நடந்துள்ளதால், தேர்வை ரத்து செய்யக் கோரி திருநங்கை ஸ்வப்னா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மோசடி புகார் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டது.
அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடைபெற்று வருகின்றது.
இதனிடையே டி.என்.பி.எஸ்.சி முறைகேடு புகாரை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் புதிதாக மனு தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவில் தேர்வில் 74 பேர் தேர்வு செய்யபட்டனர். தேர்வு பெற்றவர்களில் மனித நேய பயிற்சி மையம் மற்றும் அப்பல்லோ பயிற்சி மையங்களில் இருந்து மட்டுமே 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த குறிப்பிட்ட இரண்டு பயிற்சி மையத்தில் படித்தவர்கள் மட்டுமே அதிக அளவில் தேர்ச்சி அடைந்தது. சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்திய விசாரணை அதிகாரி தொடர்ந்து பணியிட மாறுதல் செய்யபட்டு வருவதாகவும் இந்த முறைகேட்டில் ஈடுபட சம்மந்தப்பட்ட பயிற்சி மையங்களில் இருந்து டி.என்.பி.எஸ்.சி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி, செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் அமைச்சர் ஆகியோர் மாணவரிடம் இருந்து 15 முதல் 25 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு முறைகேடுகள் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் இந்த புகார் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற சிபிஐக்கு மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இந்த முறைகேடு என்பது அனுமதிக்க முடியாதது என்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் தேர்வாணைய அதிகாரிகளும் ஊழியர்களும் உள்ளதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றினால்தான், முறைகேட்டின் உண்மைத் தன்மையை வெளிக் கொண்டுவர முடியும்; எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், மத்திய குற்றப்பிரிவின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதாகவும், விசாரணை அதிகாரி இதுவரை 6 இடைக்கால அறிக்கைகளை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாகவும், விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். குரூப் 1 தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர அரசு நேற்று அனுமதி அளித்துள்ளதாகவும், 2015 ஆம் ஆண்டு நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தேவையில்லை எனவும் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக இருக்கும் டிஎன்பிஎஸ்சி தனக்கு எதிரான விசாரணையை யார் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்க கூடாது எனவும், விசாரணை நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் வாதிட்டார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜராகியிருந்த தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், திமுக-வின் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதிட இருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து சிபிஐ விசாரணை கோரி திமுக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு, டிஎன்பிஎஸ்சி, சிபிஐ ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"