குரூப் 2 தேர்வில் மாற்றம் ஏன்? : டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் விளக்கம்

TNPSC group 2 exam syllabus : கண்டிப்பாக தமிழக வரலாற்றையும் தமிழ் மொழியையும் அறிந்தவர்களாகவும் தமிழக அரசு அலுவலகங்களில் கோப்புகள் எழுதும் திறன் உடையவர்களாகவும் இருக்க வேண்டும்

By: Updated: September 29, 2019, 12:08:54 PM

தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வை (Group-2) நடத்துகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 கட்ட நடைமுறைகளுக்குப் பிறகுதான் தேர்ச்சி பெற முடியும். இதில், முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகியவை இடம்பெறும். இந்த நிலையில், மேற்கண்ட மொழிப்பாடங்கள் இனி இடம்பெறாது என்ற அறிவிப்பு வெளியானது. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். `மொழிப்பாடங்களை நீக்கி, மற்ற மாநிலத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நடவடிக்கை’ என்று அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், `தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி அறியாத எவரும் இந்தத் தேர்வை எழுத முடியாது’ என்று தேர்வாணையம் தரப்பிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் ஐ.ஏ.எஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி II மற்றும் IIA அதாவது, நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பணிகளுக்கும் ஒரே மாதிரியான தேர்வாக, அதாவது, முதல்நிலை (Prelims) மற்றும் முதன்மை (Mains) எழுத்துத்தேர்வு கொண்டவையாக மாற்றியுள்ளது.

இரண்டு பதவிகளுக்கும் தனித்தனியே தேர்வுகள் நடத்துவதால் தேவையற்ற கால விரயமும் பொதுமக்களின் வரிப்பணமும் வீணாவதுடன் விண்ணப்பதாரர்களும் இரண்டுமுறை தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது. எனவே, இரண்டு தேர்வுகளையும் ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுநாள்வரை தொகுதி II மற்றும் IIA முதனிலை (Prelims) தேர்வுகளில் பொது அறிவு 100 வினாக்களும் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்களும் கேட்கப்பட்டு வந்தன. விண்ணப்பதாரர்கள் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் இரண்டில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதி தேர்வாக முடியும். அதாவது தமிழ் தெரியாதவர்கள்கூட இவ்வகையான தேர்வுகளை எழுத முடியும் என்ற நிலை இருந்தது.

அதனால் தற்போது பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டு, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் முதல்நிலை (Prelims) தேர்வின் பாடத்திட்டத்தில் இரண்டு அலகுகள் (Units) சேர்க்கப்பட்டுள்ளன. முதல்நிலைத் (Prelims) தேர்வில் நீக்கப்பட்ட பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலப் பகுதிகள் முதன்மை (Mains) எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் கூடுதல் முக்கியத்துவத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன.

முதல்நிலைத் (Prelims) தேர்வுக்கான பாடத்திட்டத்தில் தமிழ் சமூகத்தின் வரலாறு, அகழ்வாராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகள், சங்ககாலம் தொட்டு தற்காலம் வரையிலான தமிழ் இலக்கியம், சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு, 19-ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரையிலான தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் இயக்கங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக திருக்குறளுக்கு தனியே முக்கியத்துவம் தரப்பட்டு பல்வேறு தலைப்புகளில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், இத்தேர்வுக்கான பாடத்திட்டத்தில் சமூகநீதி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகள், சமூக நல்லிணக்கம், தமிழகத்தின் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் போன்ற தமிழகம் தொடர்பான பல்வேறு தலைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மேற்படி தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள், கண்டிப்பாக தமிழக வரலாற்றையும் தமிழ் மொழியையும் அறிந்தவர்களாகவும் தமிழக அரசு அலுவலகங்களில் கோப்புகள் எழுதும் திறன் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தேர்வாணையம் கருதுகிறது.

எனவே, முதன்மைத் (Mains) தேர்வில், தமிழ் – ஆங்கிலம் மொழிபெயர்ப்பு; ஆங்கிலம் – தமிழ் மொழிபெயர்ப்பு; சுருக்கி வரைதல்; கட்டுரை எழுதுதல் ; குறிப்புகளைக் கொண்டு விளக்கி எழுதுதல்; திருக்குறள் பற்றிய கட்டுரை, அலுவலகக் கடிதம் எழுதுதல் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. முதன்மை எழுத்துத் தேர்விலும் தமிழுக்கும் தமிழகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் தமிழர் நாகரிகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, சங்க கால இலக்கியம், தமிழகத்தின் இசைப் பாரம்பர்யம், நாடகக் கலை, பகுத்தறிவு இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கங்கள், பெண்ணியம் மற்றும் தற்கால தமிழ் மொழி குறித்த பாடத்திட்டமாக மாற்றப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tnpsc group 2 exam syllabus tnpsc explanation

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X