குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரி, தலைமைச் செயலக பெண் ஊழியர் கவிதா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து
உத்தரவிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் இடைத்ததரகர் ஜெயக்குமார், டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஓம் காந்தன், காவலர் சித்தாண்டி தொடங்கி சிபிசிஐடி போலீசார் பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தன்னை கைது செய்யக் கூடும் என முன்ஜாமீன் கேட்டு, தலைமைச் செயலகத்தில் நிதித்துறையில் உதவியாளராக பணியாற்றி வரும் கவிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ராமேஸ்வரத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் (தனியார் பள்ளியில்)
தேர்வெழுதியதாக கூறியுள்ள கவிதா, 2017-2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 2ஏ தேர்வில் 47வது இடம் (overall rank) பெற்றதாகவும், தன்னுடன் தேர்வு எழுதிய விக்னேஷ், சுதா மற்றும் சுதா தேவி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள நிலையில், தன்னை கைது செய்யக் கூடும் என மனுவில் அச்சம் தெரிவித்திருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி தான் குழந்தை பெற்றெடுத்து, மகப்பேறு விடுப்பில் உள்ளதால், தன் சூழலை கருத்தில் கொண்டு தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐயப்பராஜ், விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளதாலும்,
குரூப் 2ஏ தேர்வில் கவிதா 47வது இடம் பெற்றுள்ளதாலும், அது குறித்து விரிவாக விசாரிக்க வேண்டியிருப்பதால் முன்ஜாமீன் வழங்ககூடாது எனவும் வாதிட்டார்.
காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று, கவிதாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, குழந்தை பிறந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாததால், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டுமா? என்பதை காவல்துறை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.