/indian-express-tamil/media/media_files/2025/06/15/uXuEr3v7NgevWGx4ltIJ.jpg)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று (ஜூன் 15) நடத்தப்படும் குரூப்-1, 1 ஏ தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1, 1 ஏ தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அதன்படி, "சென்னையில் ஏறத்தாழ 170 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் சுமார் 200 முதல் 300 தேர்வர்கள் இருப்பார்கள். இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் இரண்டு மாதத்திற்குள்ளாக வெளியிடப்படும். அதில் இருந்து மூன்று மாதத்திற்குள் மெயின் தேர்வு நடைபெறும்.
72 பணிகளுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. டி.என்.பி.எஸ்.சி மூலமாக கடந்த ஆண்டில் சுமார் 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இன்றைய தேர்வில் எளிமைப்படுத்தப்பட்ட ஓ.எம்.ஆர் தாள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனுபவத்தின் அடிப்படையில் பல்வேறு பணிகளை டி.என்.பி.எஸ்.சி மேற்கொண்டு வருகிறது.
மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், பாடத்திட்டங்களை மேம்படுத்தி இருக்கிறோம். தமிழ்நாட்டை பொறுத்தவரை டி.என்.பி.எஸ்.சி தேர்வில் மாணவர்கள் அதிகளவில் முறைகேடுகளில் ஈடுபடுவது கிடையாது.
ஒவ்வொரு தேர்வும், ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வகையில் திட்டமிடுகிறோம். தேர்வு எழுதுவதற்கு நேரம் பற்றாக்குறையாக இருக்கிறது என்று பெரிய அளவில் யாரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை. கூடுமானவரை அனைத்து தேர்வு மையங்களையும், எளிதாக சென்றடையக் கூடிய இடங்களில் வைப்பதற்கு முயற்சி செய்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.