/indian-express-tamil/media/media_files/2025/06/17/mcV7Ywoke9VIcUdEyA6o.jpg)
மீண்டும் புத்துயிர் பெறுமா? மாடித் தோட்டம் திட்டம்: நிதி, அலட்சியம், மக்கள் ஆர்வம் இன்மை காரணமா?
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட, வீட்டு மாடிகளில் காய்கறி மற்றும் பழங்கள் வளர்க்கும் திட்டம், தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருந்தது. தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. ”Do It Yourself” என்ற இந்தத் திட்டம், 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ரூ.900-க்கு காய்கறி மற்றும் பழச்செடிகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.
இத்தொகுப்புகளில் விதைகள் மட்டுமன்றி, மண்வெட்டி, களைக்கொத்தி, உரங்கள் மற்றும் விளக்க உரை போன்ற கருவிகளும் அடங்கியிருந்தன. தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், மக்களின் வீடுகளுக்குச் சென்று, எவ்வாறு தோட்டம் அமைப்பது? என்பதை செயல்விளக்கம் அளித்தனர். மேலும், மாதந்தோறும் கண்காணிப்பு மேற்கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய தொகுப்புகளையும் வழங்கினர். ஒரு நபர் ஒரே நேரத்தில் 2 தொகுப்புகள் வரை வாங்கிக் கொள்ள முடியும் என்று இருந்தது.
இத்திட்டம் நகர மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதால், ஜெயலலிதா இத்திட்டத்தை 2016-ஆம் ஆண்டு மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தினார். அந்தக் காலகட்டத்தில் சுமார் 1,000 முன்பதிவுகளைக் கண்ட இத்திட்டம், தற்போது வெறும் காகித அளவிலேயே உள்ளது.
தற்போது வாரத்திற்கு 100-க்கும் குறைவான முன்பதிவுகளே வருகின்றன. இத்தொகுப்புகளை விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ‘இ-தோட்டம்’ செயலி, iOS மற்றும் Android ஆகிய 2 தளங்களிலிருந்தும் நீக்கப்பட்டுவிட்டது. தோட்டக்கலைத் துறையின் வலைத்தளத்தின் மூலமாக இத்தொகுப்புகள் விற்பனை செய்யப்பட இருந்தன.
ஆனால், TOI (டைம்ஸ் ஆஃப் இந்தியா) OTP ஐப் பயன்படுத்தி தொகுப்புகளை முன்பதிவு செய்தபோது, துறையுடன் தொடர்பில் இல்லாத ஓய்வு பெற்ற அதிகாரிகளின் தொடர்புகள் மட்டுமே கிடைத்தன. இந்த ஓய்வுபெற்ற அதிகாரிகளைத் தொடர்புகொண்டபோது, மாதவரம், பெரம்பூர், அண்ணா நகர், செம்மொழி பூங்கா மற்றும் திருவான்மியூர் ஆகிய நகரிலுள்ள 5 தோட்டக்கலைத் துறை கிடங்குகளில் உள்ள அதிகாரிகளை அணுகுமாறு தெரிவித்தனர்.இக்கிடங்குகளிலேயே தொகுப்புகள் விற்பனை செய்யப்பட வேண்டும்.
கிடங்குகள் மூடல் மற்றும் நிதிப்பற்றாக்குறை:
அண்ணா நகர் மற்றும் செம்மொழி பூங்காவில் உள்ள நாற்று கிடங்குகள் மூடப்பட்டுள்ளன. திருவான்மியூரில் உள்ள கிடங்கில் இருப்பில்லை. அண்ணா நகர் கிடங்கின் முன்னாள் துணை தோட்டக்கலை அலுவலர் பிரபாகரன், திட்டத்திற்கு நிதி இல்லை என்றும், சித்த மருத்துவக் கல்லூரி நில வாடகையை உயர்த்தியதால் கிடங்கை மூடிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தனியார் நாற்றங்கால்கள் பெருகிவிட்டதால், மக்கள் அவற்றையே விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அணுகல் இல்லாமை மற்றும் தரக்குறைபாடு:
அரசு 5 ஆண்டுகளுக்கு முன் நாற்று தொகுப்புகளின் விலையை ரூ.450 ஆகக் குறைத்தபோதிலும், பயனாளிகள் இல்லை. 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளின் கொள்கைக் குறிப்புகளிலும் இத்திட்டம் இடம் பெறவில்லை. விழிப்புணர்வு இல்லாமை மற்றும் தொழில்நுட்பத்தை புதுப்பிப்பதில் அதிகாரிகளின் அலட்சியம் ஒருபுறம் இருக்க, அணுகல் இல்லாமை மற்றும் தொகுப்புகளின் தரம் குறைவு போன்ற காரணங்களையும் பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மாடித்தோட்ட ஆர்வலர் கே. சாந்தகுமார், குறைந்த எண்ணிக்கையிலான கிடங்குகள் காரணமாக, நகரத்தின் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தொகுப்பு வாங்குவது கடினம் என்று கூறினார்.
மீண்டும் புத்துயிர் பெறுமா?
வேளாண்மைத் துறை செயலாளர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், இத்திட்டம் செயல்படாமல் இல்லை. "ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட் இறுதி செய்யப்பட்ட பிறகு, பொதுவாக ஜூலை மாதம் நிதி ஒதுக்கீடு செய்கிறோம். கிடங்குகள் ஏன் மூடப்பட்டுள்ளன என்பதை விசாரித்து, அவற்றை மீண்டும் செயல்படுத்துவோம்," என்று அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தெரிவித்தார்.
நகர்ப்புற வனங்களை உருவாக்கும் ஹாஃபீஸ் கான், அரசு கட்டிடங்கள் மற்றும் பெரிய இடவசதி கொண்ட உள்கட்டமைப்புகளில் மாடித் தோட்டத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார். "தோட்டம் வளர்க்க நிலம் கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது. எனவே, மாடித்தோட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். இது கட்டிடங்களை குளிர்விக்கவும் உதவுகிறது," என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.