Advertisment

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணம்: நண்பனை கொன்ற ஜிம் மாஸ்டர் தானும் இறந்ததாக நாடகம்

ரூ. 1 கோடி இன்சூரன்ஸ் பணம் பெற, நண்பனை கொன்ற சென்னையைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர் தானும் இறந்ததாக நாடகம் போட்டுள்ளார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

author-image
WebDesk
New Update
To claim Rs 1 crore insurance Chennai man stages his own death after killing friend Tamil News

லீலாவதி அளித்த தகவலின்படி சுரேஷ், ஹரிகிருஷ்ணன், கீர்த்திராஜன் ஆகியோருடன் டில்லிபாபு சென்றது தெரிய வந்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

chennai | crime: சென்னை எண்ணுார் அடுத்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 39). பெயின்டர் வேலை செய்யும் இவர், கடந்தாண்டு செப்டம்பர் 16ல், செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் அடுத்த அல்லாணுார் பகுதியில், குடிசை வீடு தீப்பற்றி எரிந்த சம்பவத்தில், கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 

Advertisment

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த ஒரத்தி போலீசார், இந்தக் கொலையில் தொடர்புடைய டில்லிபாபுவின் நண்பரான, சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சுரேஷ், 38, என்பவரை, நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்தனர். இவருக்கு உடந்தையாக இருந்த வேலுார் மாவட்டம், கலாஸ்பாளையத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 32, தாம்பரம் அடுத்த மாம்பாக்கத்தைச் சேர்ந்த கீர்த்திராஜன், 23, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கொலை குறித்து போலீசார் பேசுகையில், கருகிய நிலையில் கிடந்த டில்லிபாபுவும், சுரேஷும் நண்பர்கள். சென்னையில், 'ஜிம் மாஸ்டர்' பணி செய்த சுரேஷ், தன் பெயரில் 1 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் செய்துள்ளார். இத்தொகையை உயிருடன் இருக்கும் போதே பெற்று அனுபவிக்க திட்டமிட்ட சுரேஷ், தன் வயதுடைய நபரை தேடியுள்ளார். அப்போது, அயனாவரத்தில் 10 ஆண்டுகளுக்கு முன், தன் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த டில்லிபாபு நினைவுக்கு வந்துள்ளார்.

தாய் லீலாவதி, 69, என்பவருடன், எர்ணாவூரில் டில்லிபாபு வசிப்பது தெரிந்து, தன் கூட்டாளிகளான ஹரிகிருஷ்ணன், கீர்த்திராஜன் ஆகியோருடன், டில்லிபாபு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சில நாள் தங்கி பழகிய அவர்கள், கடந்த செப்டம்பர் 9ம் தேதி, வெளியூருக்கு வேலைக்கு செல்லலாம் எனக் கூறி, டில்லிபாபுவை, அச்சிறுபாக்கம் அடுத்த அல்லாணுார் அழைத்து வந்துள்ளனர்.

அங்கு, ஏற்கனவே திட்டமிட்டு கட்டி வைத்திருந்த குடிசையில், சம்பவத்தன்று இரவு ஹரிகிருஷ்ணன், கீர்த்திராஜன், சுரேஷ், டில்லிபாபு ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது, மூவரும் சேர்ந்து டில்லிபாபுவை கழுத்தை நெரித்து கொன்று, குடிசையை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டு, அரக்கோணம் அடுத்த திருவாலங்காட்டிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில், குடிசை வீட்டில் உடல் கருகி இறந்தது சுரேஷ் தான் என, சுரேஷி-ன் அக்கா மரியஜெயஸ்ரீ (40) ஒரத்தி போலீசாரிடம் மனு அளித்து, செங்கல்பட்டு மருத்துவமனையில் இருந்த டில்லிபாபுவின் உடலை பெற்று, சுரேஷ் உடல் போல சென்னை அயனாவரத்தில் அடக்கம் செய்துள்ளார். சுரேஷ் உயிரிழந்ததாக அயனாவரத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரும் ஒட்டியுள்ளனர்.

இந்நிலையில், டில்லி பாபுவின் தாய் லீலாவதி, நண்பர்களுடன் வேலைக்கு சென்ற தன் மகனை காணவில்லை என, எண்ணுார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை போலீசார் அலைக்கழித்ததால், ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனாலும், மகன் குறித்து தகவல் கிடைக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, லீலாவதி அளித்த தகவலின்படி சுரேஷ், ஹரிகிருஷ்ணன், கீர்த்திராஜன் ஆகியோருடன் டில்லிபாபு சென்றது தெரிய வந்துள்ளது. பின்னர் அரக்கோணம் அருகே தங்கியிருந்த சுரேஷ், ஹரிகிருஷ்ணன், கீர்த்திராஜன் ஆகியோரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். 

இதில், இன்சூரன்ஸ் பணம் 1 கோடி ரூபாயை பெற திட்டமிட்டு கீர்த்திராஜன், ஹரிகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய் தருவதாக பேசிய சுரேஷ், நண்பர் டில்லி பாபுவை கொன்று எரித்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, நேற்று முன்தினம், மூவர் மீதும் வழக்கு பதிந்த போலீசார், மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

முன்னதாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் இன்சூரன்ஸ் பிரீமியமாக ரூ.50,000 செலுத்தி வந்த சுரேஷ் உரிமை கோரப்படாத உடல்களின் இறுதிச் சடங்குகளுக்கு அதிகாரிகளுக்கு உதவும் அமைப்புகளின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, அரசு மருத்துவமனையில் இருந்து உடலைக் கோர அவர் முதலில் திட்டமிட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: To claim Rs 1 crore insurance, Chennai man stages his own death after killing friend

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Crime
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment