ஜெ. சமாதியை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி வழக்கு : தமிழக அரசுக்கு நோட்டீஸ்

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் எஸ்.துரைசாமி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். புதைக்கப்பட்டுள்ள இடத்தில் நினைவு மண்டபம் கட்ட தடை விதிக்க கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் நினைவிட வளாகத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி. ஆர். நினைவிடத்தில் ஜெயலலிதாவின் உடலை புதைக்க மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறவில்லை. மேலும், கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மைச் சட்டத்தின்படி, கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் எந்தவித கட்டமான பணிகளும் மேற்கொள்ள கூடாது. உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் உறுதி செய்துள்ளது. ஆனால், இந்த விதிக்கு மாறாக, ஜெயலலிதா புதைக்கப்பட்ட இடத்தில் மணி மண்டபம் கட்டப் போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், மறைந்த ஜெயலலிதாவை, குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே, நீதிமன்றத்தால், குற்றவாளி என தண்டிக்கப்பட்ட நபருக்கு அரசு செலவில் மணி மண்டபம் கட்டுவது சட்ட விரோதமான செயலாகும். எனவே, மெரினா கடற்கரையில், ஜெயலலிதாவுக்கு, மணி மண்டபம் கட்ட தடை விதிக்க வேண்டும். எந்த விதி முறையான அனுமதியும் இல்லாமல் ஜெயலலிதா உடல் மெரினா கடற்கரையில் புதைக்கபட்டுள்ளது. எனவே அங்கிருந்து, அவரது உடலை தோண்டியெடுத்து, வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இது குறித்து சென்னை மாநகராட்சி, தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டு துறை, தலைமை செயலாளர், மத்திய சுற்றுச்சூழல் துறை, கடலோர மேலாண்மை ஆணையம் ( C R Z) ஆகியோர் அடுத்த மாதம் 18ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்வரை மணிமண்டப கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதார் வக்கீல் கோரினார்.

இதனை நீதிபதிகள் ஏற்கவில்லை.

×Close
×Close