துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோரின் பதவியை பறிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினரும் எதிர்கட்சி துணை கெறாடாவுமான கு.பிச்சாண்டி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :
கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அரசு கொறடா ராஜேந்திரனின் உத்தரவை மீறி ஓ.பன்னீர்செல்வம், க.பாண்டியராஜன் உள்ளிட்ட 11 பேர் முதல்வருக்கு எதிராக வாக்களித்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களான முருகுமாறன், தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன், ரங்கசாமி ஆகியோர் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர்.
ஆனால் அந்த மனு மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார்.
கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால் அரசியல் அமைப்பு சட்ட விதி 10-ன் படி ஓ.பி.எஸ் மற்றும் மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோர் எம்.எல்.ஏ என்ற தகுதியை இழந்து விட்டனர். அப்படி இருக்கும்போது, ஓ.பி.எஸ் துணைமுதல்வர் பதவியும், பாண்டியராஜன் அமைச்சர் பதவியும் வகிப்பது சட்டவிரோதமானது.
கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களிக்கும்போதே அவர்கள் தகுதியிழந்து விடுகிறார்கள். அல்லது, கொறடா உத்தரவை மீறிய இவர்கள் 2 பேர் மீதும் வாக்களித்த 15 தினங்களுக்குள் மன்னிப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் கெறாடா இவர்களை 15 தினங்களுக்குள் மன்னிக்கவும் இல்லை.
இதே போன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் கொறடா உத்தரவை மீறிய போது அவர்கள் தகுதி இழப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சபாநாயகர் தனியாக ஒரு தகுதியிழப்பு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
கொறடா உத்தரவை மீறியதால் உச்சநீதிமன்ற உத்தரவின் படி தகுதி இழக்கின்றனர். எனவே சட்டமன்ற உறுப்பினராக இல்லாத இருவரும், எந்த தகுதியின் அடிப்படையில் அவர்கள் தற்போது அமைச்சர் பதவி வகிக்கிறார்கள் என்பது குறித்து இருவரும் தன்னிலை விளக்கமளிக்க இருவருக்கும் உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். மேலும் இந்த சட்டவிரோதமான செயலை தடுக்க நீதிமன்றம் தலையிட்டு, அவர்கள் அமைச்சராக செயல்பட தடை விதிக்க வேண்டுமென இடைக்கால கோரிக்கையும் வைத்துள்ளனர்.
தி.மு.க எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி இன்று தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.