/indian-express-tamil/media/media_files/mmQfLVx8TaLx9IKNSFmn.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை:
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 92.49-க்கும் விற்பனையாகிறது. ஒரு கிலோகிராம் சி.என்.ஜி எரிபொருளின் விலை ரூ. 90.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தேர்தல் பணிகள் தீவிரம்:
நாளை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடு பணிகள் இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
Feb 04, 2025 23:36 IST
சர்வதேச பாடகர் எட் ஷீரனின் இசைக் கச்சேரி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நாளை (பிப். 05) சர்வதேச பாடகர் எட் ஷீரனின் இசைக் கச்சேரியை ஒட்டி, அப்பகுதியில் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
Feb 04, 2025 21:38 IST
திருடிய பணத்தில் நடிகைக்கு சொகுசு வீடு: பெங்களூருவில் பிரபல திருடன் கைது
நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தான் திருடிய பணத்தில் கொல்கத்தாவில் நடிகை ஒருவருக்கு ரூ3 கோடியில் சொகுசு வீடு வாங்கி கொடுத்தாக தகவல் வெளியாகியுள்ளது. மராட்டியத்தை சேர்ந்த பஞ்சாக்ஷரசாமி என்ற இவர், 2016 –ம் ஆண்டு திருட்டு வழக்கில் கைதாகி குஜராத்தில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற விடுதலையானதும் பெங்களூர் வந்துள்ளார்.
-
Feb 04, 2025 20:47 IST
கடந்த ஆண்டு 21 லட்சம் நாய் கடி சம்பவங்கள், 37 பேர் மரணம்: மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் கடந்த ஆண்டு 21 லட்சம் நாய் கடி சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். குரங்கு உள்ளிட்ட விலங்குகள் கடித்ததாக, 5.04 லட்சம் சம்பவங்கள் நடந்துள்ளது, இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளர்.
-
Feb 04, 2025 19:16 IST
மத ரீதியான மோதல் வராமல் தடுப்பதே அரசின் கடமை: ஜெயக்குமார்
திருப்பரங்குன்றம் பிரச்னையை முதலிலேயே பேசி முடித்திருக்க வேண்டும். மத ரீதியான மோதல் வராமல் தடுப்பதே அரசின் கடமை. அரசு தூங்காமல் விழித்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் திமுக ஆட்சியில் மக்கள் தினமும் பாதிக்கப்படுகிறார்கள். உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் சட்ம் ஒழுங்கை கவனிக்கவில்லை. உயிருக்கு பாதுகாப்பில்லை என்று ஏ.டி.ஜி.பி கூறும் அளவுக்கு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
-
Feb 04, 2025 18:53 IST
மிரண்டு ஓடிய யானை தாக்கியதில் ஒருவர் பலி
கேரளா மாநிலம் திருச்சூர் அருகே கோயில் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிரண்டு ஓடிய யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளர்.
-
Feb 04, 2025 18:46 IST
இன்றைய முட்டை விலை
நாமக்கல் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை இன்று 20 காசுகள் சரிந்து, ரூ. 4.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை முதல் புதிய விலை அமலுக்கு வருகிறது.
-
Feb 04, 2025 18:23 IST
ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை
அண்ணா பல்கலை. வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வரும் 6ம் தேதி புழல் சிறையிலிருந்து தடயவியல் துறை அலுவலகத்திற்கு அழைத்து வர சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
-
Feb 04, 2025 17:58 IST
'மக்களின் பணம் மக்களுக்காகவே' - மோடி பேச்சு
"மக்களின் பணம் மக்களுக்காகவே என்பது தான் நம்முடைய மாடல், முந்தைய அரசுகள் ஊழலில் திளைத்துப் போயிருந்தன. ஜன்தன் ஆதார் மொபைல் ஆகியவற்றின் மூலம் நேரடி மானியம் வழங்குவதை தொடங்கினோம். சுமார் ரூ.40 லட்சம் கோடி, மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது" என்று பிரதமர் மோடி பேசினார்.
-
Feb 04, 2025 17:57 IST
இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி?
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
-
Feb 04, 2025 17:43 IST
10 கோடி போலி பயனாளிகள் நீக்கம் - மோடி பேச்சு
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி தனது பதிலுரையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ரூ.40 லட்சம் கோடியை நேரடியாக மக்களின் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளது. மிஸ்டர் க்ளீன் அவுட் ஆஃப் ஃபேஷன் என்று அழைக்கப்படும் ஒரு பிரதமர் இருந்தார். டெல்லியில் இருந்து 1 ரூபாய் சென்றால், கிராமத்திற்கு 15 பைசா சென்றடையும் என்று அவர் கூறியிருந்தார். அப்போது ஒரே கட்சிதான் ஆட்சியில் இருந்தது.
நாங்கள் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம். ஜனதனையும் ஆதாரையும் கொண்டு வந்தோம். நேரடி பலன் பரிமாற்றம் மூலம் மக்களுக்கு நேரடியாக பணம் அனுப்பினோம். ரூ.1000 அனுப்பியுள்ளோம். மக்களின் கணக்கில் நேரடியாக 40 லட்சம் கோடி சென்றடைந்துள்ளது.
அரசாங்கம் 10 கோடி போலி பயனாளிகளை நீக்கியுள்ளது. அதே நேரத்தில் தகுதியான பயனாளர்களை அடையாளம் கண்டுள்ளது. 10 கோடி போலி பயனாளிகளை நீக்கியதன் மூலம் ரூ. 3 லட்சம் கோடி தவறான கைகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது." என்று அவர் தெரிவித்தார்.
-
Feb 04, 2025 17:28 IST
'மக்களுக்கு உண்மையான வளர்ச்சியைக் கொடுத்தோம்; பொய்யான முழக்கங்கள் அல்ல' - மக்களவையில் மோடி பேச்சு
"குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 14வது முறையாக இந்த அவையில் பதிலளிக்க வாய்ப்பு தந்த மக்களுக்கு நன்றி. நேற்றும், இன்றும் தீர்மானத்தின் மீது பல உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். பாராட்டுகளும், விமர்சனங்களும் இருந்தன.
4 கோடி வீடுகள், 12 கோடிக்கும் அதிகமான கழிவறைகளை கட்டியுள்ளோம். வெற்று வாக்குறுதிகளை கொடுக்கவில்லை. மக்களுக்கு உண்மையான வளர்ச்சியை கொடுத்துள்ளோம். தற்போது 2025ம் ஆண்டில் இருக்கிறோம். அதாவது 21ம் நூற்றாண்டில் 25% முடிந்துவிட்டது. அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை குடியரசுத் தலைவரின் உரை எடுத்துக்கூறியுள்ளது.
மக்களுக்கு உண்மையான வளர்ச்சியைக் கொடுத்தோம்; பொய்யான முழக்கங்கள் அல்ல" என்று மக்களவையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
-
Feb 04, 2025 17:03 IST
ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார்? மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் ஆணை
ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறார் என்று நாளை மறுஇநாள் தெரிவிக்க மத்திய அரசு தலைமை வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரம் இருப்பதால் அரசியல் சாசனப்படி தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. -
Feb 04, 2025 16:29 IST
10 மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார் - சுப்ரிம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்
திருப்பி அனுப்பிய மசோதாவை அவையில் நிறைவேற்றினால் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். ஆளுநருக்கு ஜனவரி 2020 ப்ரல் 2023 வரை 12 மசோதாக்கள் அனுப்பப்பட்டன. அந்த மசோதாக்களில் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பினார். 10 மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி இருக்கிறார் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
-
Feb 04, 2025 15:50 IST
அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது - ஐகோர்ட்
அண்ணாப் பல்கலை மாணவி வழக்கில் பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது, பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை பத்திரிகையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும், விசாரனைக்கு பத்திரிகையாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Feb 04, 2025 15:18 IST
சென்னை தொழிலதிபரின் ரூ.1,000 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் - இ.டி. நடவடிக்கை
சென்னை தொழிலதிபர் ஆண்டாள் ஆறுமுகம் தொடர்புடைய இடங்களில் ஆவணங்களை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை, தொழிலதிபரின் ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது. மியூச்சுவல் ஃபனண்ில் முதலீடு செய்த ரூ.912 கோடியையும் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
-
Feb 04, 2025 15:12 IST
வள்ளலார் சத்திய ஞானசபையில் மரங்களை வெட்டுவதா? - அன்புமணி கண்டனம்
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவரின் நிலத்தில் மரங்களை வெட்டி வீழ்த்துவதா? வடலூர் சத்தியஞான சபையில் மரங்களை படுகொலை செய்வதை உடனே நிறுத்த வேண்டும் என அன்புமணி வலிறுத்தியுள்ளார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியதாக வள்ளலார் கூறியிருக்கிறார். அவரது நிலத்தில் வளர்ந்திருந்த மரங்களை வெட்டி வீழ்த்துவது வள்ளலாரால் வெறுக்கப்பட்ட உயிர்க்கொலை ஆகும். வள்ளலாரை மதிக்கும் அரசாக இருந்தால் சத்திய ஞானசபை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்; அந்தப் பகுதியில் புதிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.
-
Feb 04, 2025 14:38 IST
சென்னை மாதாவரம் எம்.எம். காலனியை, 4 மாதங்களுக்குள் காலி செய்ய ஐகோர்ட் உத்தரவு
சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்காக மாதாவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை, 4 மாதங்களுக்குள் காலி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலனியை காலி செய்ய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி 3 பேர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வரும் மே31ம் தேதிக்குள் காலி செய்யவில்லை என்றால் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளது
-
Feb 04, 2025 14:20 IST
கர்நாடகாவில் காது குத்துவதற்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்ட 6 மாத குழந்தை மரணம்
கர்நாடகாவில் காது குத்துவதற்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்ட 6 மாத குழந்தை உயிரிழந்தது. மருத்துவரின் கவனக்குறைவால் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
-
Feb 04, 2025 13:58 IST
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைக்க நிலம் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைக்க நிலம் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
Feb 04, 2025 13:48 IST
கால்நடைகளை லாரிகளில் ஏற்றிச் செல்ல கட்டுப்பாடுகள்; உச்ச நீதிமன்றம் உத்தரவு
கேரளாவுக்கு கடத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட 117 கால்நடைகளை ஒப்படைக்க கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அப்போது, கால்நடைகள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறதா என பரிசோதனை நடத்திய பிறகே அவற்றை ஏற்றிச் செல்ல வேண்டும். முறையான ஆவணங்களுடன் மட்டுமே கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டும். லாரிகளில் கால்நடைகள் நிற்க போதுமான இடவசதியுடன் கொண்டு செல்ல வேண்டும். முறையான காற்று வசதியுடன், உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Feb 04, 2025 13:29 IST
மகா கும்பமேளாவில் நாளை புனித நீராடுகிறார் மோடி
மகா கும்பமேளாவில் பிரதமர் மோடி நாளை புனித நீராடுகிறார். இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
-
Feb 04, 2025 13:13 IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வாக்குச்சாவடிக்கு இ.வி.எம் இயந்திரங்களை எடுத்துச் செல்லும் பணிகள் தீவிரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. 237 வாக்குச்சாவடிகளுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன
-
Feb 04, 2025 13:09 IST
பூந்தமல்லியில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல்; 2 பேர் கைது
சென்னை அருகே பூந்தமல்லியில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் சினிமா பாணியில் காரை துரத்திச் சென்று கண்ணாடியை உடைத்து மடக்கி பிடித்தனர்
-
Feb 04, 2025 12:58 IST
விகடனுக்கு ₹25 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சேது சமுத்திர திட்டம் தொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் டி.ஆர்.பாலு பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட வழக்கில் ஜூனியர் விகடனுக்கு F25 லட்சம் அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். 2012ல் ஜூனியர் விகடன் கேள்வி-பதில் பகுதியில் தன்னைப் பற்றி ஆதாரமற்ற அவதூறு செய்தியை வெளியிட்டதாக 2014ல் பாலு வழக்கு தொடர்ந்திருந்தார். ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டிருந்த நிலையில் 725 லட்சம் வழங்க விகடனுக்கு நீதிபதி நக்கீரன் உத்தரவிட்டுள்ளார்.
-
Feb 04, 2025 12:49 IST
சென்னையில் நீடிக்கும் விமான சேவை பாதிப்பு
சென்னையில் காலையில் ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது விமான சேவை. பாட்னா, ஹைதராபாத், சிலிகுரி புறப்பட வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதம் ஆகியுள்ளது. பல விமானங்கள் 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாவதால் பயணிகள் தவிப்புக்குளாகியுள்ளனர்.
-
Feb 04, 2025 12:37 IST
ரயில்வே திட்டங்களில் தாமதம் - விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!
தமிழ்நாட்டின் ரயில்வே பணிகளுக்கென ஒன்றிய அரசு 76,626 கோடியை ஒதுக்கிய போதிலும், எந்த ரயில்வே திட்டத்திற்கும் அது முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்பதை மக்களவையில் சபையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார். ரயில்வே உட்கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்துவது, முன்பதிவில்லா பெட்டிகளை அதிகரிப்பது, பாம்பன் பாலம் திறப்பு, மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ரயில் கட்டண சலுகை ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
-
Feb 04, 2025 12:22 IST
மத்திய பட்ஜெட் - திமுக கண்டன பொதுக்கூட்டம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கூடுதல் ஆம்புலன்ஸ்கள் அறிவிப்பு. ரூ.30.28 கோடியிலான ஆம்புலன்ஸ் உட்பட 147 புதிய வாகனங்களின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
-
Feb 04, 2025 12:15 IST
ஆம்ஸ்ட்ராங் வழக்கு - நாகேந்திரனின் மனு தள்ளுபடி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரே கோரிக்கையுடன் இரு நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்வதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளார்கள். ரூ.50,000 அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
-
Feb 04, 2025 12:11 IST
வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் விசாரணை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாந்திடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எல்டிடிஇ அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக எழுந்த புகாரையடுத்து பிரசாந்த் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். பிரசாந்த் வீட்டில் இருந்து லேப்டாப், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
Feb 04, 2025 12:10 IST
சிறுமி கடத்தல் - சென்னையில் அதிர்ச்சி
சென்னை : கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 16 வயது சிறுமி ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர். போலீசார் பின்தொடர்வதை அறிந்து சிறுமியை விட்டு விட்டு தப்பியோடியுள்ளனர் என்று தங்கள். இதை தொடர்ந்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
-
Feb 04, 2025 11:39 IST
ஆளுநருக்கு எதிரான வழக்குகள் பகல் 3 மணிக்கு விசாரணை
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் பிற்பகல் 3 மணிக்கு விசாரணை. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் முறையீடு பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவையும் சேர்த்து திருத்த மனு தாக்கல் செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
-
Feb 04, 2025 11:26 IST
"காலநிலை மாற்றம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். இயற்கை வளங்களை பாதுகாக்க அக்கறை கொண்ட சமூகமாக மாற வேண்டும். இந்தியாவிலேயே முதல் முறையாக கால நிலை மாற்றம் குறித்து ஆராய மாநாடு நடத்தியது தமிழ்நாடு மட்டும்தான்" என்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சார்பில் 2 நாட்கள் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியுள்ளார்.
-
Feb 04, 2025 11:13 IST
முதலமைச்சருக்கு அன்புமணி வேண்டுகோள்
தமிழ்நாட்டில் ஒரு சதுப்புநிலத்தைக் கூட சதுப்புநிலங்கள் ஆணையம் அறிவிக்கை செய்யவில்லை. இஸ்ரோ Wetlands Atlas 2021 பட்டியலில் உள்ள நீர்நிலை எல்லைகளை வரையறைசெய்து அறிவிக்க வேண்டும் என்று காலநிலை மாநாடு நடைபெறும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்.
-
Feb 04, 2025 11:04 IST
பேருந்தில் ரீல்ஸ் - ஓட்டுநர், நடத்துநர் பணிநீக்கம்
சென்னை மாநகரப் பேருந்தில் ரீல்ஸ் எடுத்து பதிவிட்ட ஒப்பந்த பணியாளர்களான ஓட்டுநர், நடத்துநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் பணிநீக்கம் செய்ய சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திற்கு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
-
Feb 04, 2025 11:02 IST
காலநிலை உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை சார்பில் 2 நாட்கள் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
-
Feb 04, 2025 10:43 IST
சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கி
சென்னை, ராமாபுரத்தில் சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கியால் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த துப்பாக்கியுடன் 30 தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன. மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே சாலையில் கிடந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை, சிவராஜ் என்பவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
-
Feb 04, 2025 10:29 IST
ஆளுநருக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு திருத்த மனு
ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிரான வழக்கில் யு.ஜி.சி-யையும் எதிர் மனுதாரராக சேர்த்து தமிழக அரசு சார்பில் திருத்த மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு திருத்த மனு தாக்கல் செய்துள்ளது.
-
Feb 04, 2025 10:07 IST
கூடுதல் வரி விதிப்பு தற்காலிக நிறுத்தம்
மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கையை 30 நாட்கள் ஒத்திவைத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்குள் சட்டவிரோத அகதிகள், போதை பொருட்கள் நுழைவதை தடுக்க கனடா, மெக்ஸிகோ நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. இதனால், மெக்ஸிகோ அதிபர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
-
Feb 04, 2025 09:44 IST
ஜி.பி.எஸ் நோயால் சிறுவன் உயிரிழப்பு
சென்னை, எழும்பூர் மருத்துவமனையில் ஜி.பி.எஸ் நோய் காரணமாக அனுமதிக்கப்பட்ட திருவள்ளூரைச் சேர்ந்த சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
-
Feb 04, 2025 09:00 IST
தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாடு
தமிழ்நாடு காலநிலை மாற்ற 3-வது உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது. நந்தம்பாக்கத்தில் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத் துறை சார்பாக 2 நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறுகிறது.
-
Feb 04, 2025 08:23 IST
சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை சட்டசபையில் தாக்கல்
தெலங்கானா அரசு மேற்கொண்ட சாதிவாரி கணக்கெடுப்பின் அறிக்கை, இன்றைய தினம் அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. மாநில திட்டமிடல் துறை சார்பாக நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பின் அறிக்கை, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை துணைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
-
Feb 04, 2025 08:18 IST
மகா கும்பமேளா தொடர்பான மனு நிராகரிப்பு
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பான பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அறிவுறுத்தியுள்ளார்.
-
Feb 04, 2025 07:50 IST
பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிப்பு
திடீர் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, சென்னையில் தரையிறங்க முடியாமல் 6 விமானங்கள் பெங்களூர், திருவனந்தபுரம், ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
-
Feb 04, 2025 07:45 IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். தமிழகத்தின் நிதி உரிமைக்காக மத்திய பட்ஜெட்டை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 04, 2025 07:38 IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - நாளை வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர்.
-
Feb 04, 2025 07:16 IST
பனிமூட்டத்தால் புறநகர் ரயில் சேவை பாதிப்பு
சென்னையில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால், செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகிறது.
-
Feb 04, 2025 07:05 IST
மோடி அமெரிக்கா பயணம்
பிரதமர் நரேந்திர மோடி, வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். அங்கு வாஷிங்டனில் அதிபர் டிரம்பை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.