Today chennai weather : மழையை வேண்டி தவம் கிடக்கும் தமிழக மக்களுக்கு கடைசி நம்பிக்கையாக மழை குறித்த செய்தி. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. அதற்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. கடந்த 4 நாட்களாக வெப்ப காற்றும் வீசியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் பகலில் மாலை 4 மணி வரை வெளியில் வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
இதுஒருபுறம் இருக்க சென்னை வாசிகள் தண்ணீர் பஞ்சத்தில் காலி குடங்களுடன் தெருவில் அலைந்துக் கொண்டிருக்கின்றனர். இவை எல்லாவற்றிருக்கும் ஒரே தீர்வு மழை பெய்வது தான். மழையை வேண்டி கோயில்களில் யாகம் வரை நடத்தப்பட்டு விட்டன. ஆனால் சென்னையில் மட்டும் இந்த நாள் வரை லேசான தூரல் கூட பூமியில் விழவில்லை. பெரிதும் நம்பி இருந்த ஃபனி புயலும் சென்னையை ஏமாற்றி விட்டு சென்றது. போற நிலைமையை பார்த்தால் சென்னை மக்கள் தண்ணீர் வேண்டி ரோடுகளில் போராட்டம் செய்ய தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இந்நிலையில் தான் தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளதால் அனல் காற்று எச்சரிக்கை விலக்கி கொள்ளப்படுவதாகவும், சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரி செல்ஸியசாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்ஸியசாகவும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை சென்னை மக்களை வஞ்சிக்கிறதே தவிர வட மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக மிதமாக மழை பெய்து அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.மதுரை, தல்லாகுளம் 50 மிமீ, தர்மபுரி, பாப்பிரெட்டி பட்டி, திருமங்கலம் 40 மிமீ, நெய்வேலி, ஒசூர் 30 மிமீ, கரூர், பாலக்கோடு, 20 மிமீ, தளி, செஞ்சி, தாளவாடி, சூளகிரி, ஸ்ரீபெரும்புதூர், போளூர் 10 மிமீ மழை பெய்துள்ளது.
இதுதவிர காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மாலையில் செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
சென்னையை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், தலைநகரில் அனலாக வெயில் கொதித்து வருவதுதான் அனைவரின் கவலையாக உள்ளது.