பேருந்துகள் இரவு 9 மணி வரை இயக்கப்படும் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அரசுப் பேருந்துகள் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்றும் பேருந்துகள் மாவட்டத்திற்குள் மட்டும் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

today govt public bus transport resumed, bus will operate until night 9 pm, பேருந்துகள் இயக்கம், இரவு 9 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும், bus will operate within distrct, minister mr vijayabaskar press meet, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,

அரசுப் பேருந்துகள் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்றும் பேருந்துகள் மாவட்டத்திற்குள் மட்டும் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, 6 மாதங்களுக்கு மேல், தடைப்படுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது, “முதலமைச்சரின் உத்தரவுக்கு இணங்க, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடைப்படுத்தப்பட்டிருந்த போக்குவரத்துக் கழகங்கள் இன்று முதல் அரசினுடைய வழிகாட்டுதலின்படி இயக்குவதென்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில், கிட்டத்தட்ட 6,090 பேருந்துகள் இன்று இயக்கப்பட்டிருக்கிறது.

புறநகர பேருந்துகளில் 60 சதவீதம் அதாவது 32 பயணிகளுடனும் நகரப் பேருந்துகளில் 24 பயணிகளுடனும் இயக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, பயணிகள் முகக் கவசம் அணிய வேண்டும். அதே போல, பயணிகள் பின்புறம் வழியாக ஏறி முன்புறம் வழியாக இறங்க வேண்டும். பேருந்தில் பின்புறம் வழியாக ஏறுபவர்களுக்கு கைகளை சுத்தம் செய்வதற்கு சானிடைசர் வைக்கப்பட்டிருக்கிறது. அதே போல, பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை போக்குவரத்து துறை முதன்மைச் செயலாலரும் போக்குவரத்து துறை மேலாளரும் தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்திருக்கின்றனர்.

பயணிகளுடைய எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. படிப்படியா பயணிகள் எண்ணிக்கை உயரும்போது தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்கள். பேருந்துகளை முதற்கட்டமாக மாவட்டத்திற்குள் இயக்குவதென்று அரசு முடிவு செய்திருக்கிறது. அதன்படி முடக்கப்பட்டிருந்த போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து சேவை இன்று துவங்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் 22,000 பேருந்துகளில் 6,000 பேருந்துகளை இன்று முதல் கட்டமாக இயக்கியிருக்கிறோம். பயணிகள் எண்ணிக்கை அதிகமாகும்போது தேவைக்கு ஏற்ப பேருந்துகள் அதிகப்படுத்தபடும்.

பேருந்துகளை மாவட்டத்திற்கு இயக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார்கள். மாவட்ட எல்லையில் அருகாமையில் இருக்கக் கூடிய பேருந்து நிறுத்தம் வரை இயக்கப்படும். ஏனென்றால், பயணிகளை பாதியில் இறக்கிவிட்டுவிட்டு போக முடியாது. அதாவது, ஒரு மாவட்ட எல்லை இதோடு முடிகிறது என்றால், இன்னும் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அடுத்ததாக ஒரு பேருந்து நிறுத்தம் இருக்கிறது என்றால் அதுவரை நாங்கள் பேருந்துகளை இயக்க சொல்லியிருக்கிறோம். பயணிகளின் வசதிகளுக்கு ஏற்ப சிறிய மாற்றங்களை செய்து பேருந்துகளை இயக்குவது என்று முடிவு செய்திருக்கிறோம்.

கொரோனா வைரஸ் தாக்கம் குறைய வேண்டும் என்பதற்காக, முதலமைச்சர் மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனையைக் கேட்டு இந்த ஊரடங்கு உத்தரவு, பேருந்துகளை நிறுத்துவது என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு 6 மாத காலம் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்.

இப்போது பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்றும் முதலமைச்சர் ஒருசில தளர்வுகளை அறிவித்திருக்கிறார். படிப்படியாக மக்களுடைய தேவைக்கு ஏற்ப முதலமைச்சர் முடிவெடுத்து என்ன அறிவிக்கிறார்களோ அதன்படி போக்குவரத்துக் கழகங்கள் இயக்கப்படும்.” என்று கூறினார்.

சிதம்பரத்தில் இன்று பேருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “அப்படி ஏதாவது தேவை என்று எங்களுக்கு தகவல் வந்தது என்றால் எங்களுடைய போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். நேற்று அறிவித்த உடனேயே, நாங்கள் பேருந்துகளை தயார் நிலையில் வைத்திருந்தோம். அதனால், அறிவித்த உடனேயே பேருந்துகளை சுத்தம் செய்து தேவையான இடத்தில் ஓட்டியிருகிறோம். மிகவும் குறைவான பயணிகளே இருக்கிறார்கள். தேவை அதிகமாக இருக்கும்போது இன்னும் அதிகமான வாகனங்களை ஓட்டுவோம்.” என்று கூறினார்.

பேருந்துகள் எத்தனை மணிவரை இயக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “பேருந்துகள் இரவு 9 மணி வரை இயக்கப்படும். மக்கள் அதுவரைதான் இருப்பார்கள்.” என்று கூறினார்.

மேலும், ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ”கொரோனா பரிசோதனை என்பது நோய் அறிகுறி இருந்தால்தான் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவத் துறையினர் சொல்லியிருக்கிறார்கள். எல்லோருக்கும் பரிசோதனை தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அறிகுறி இருக்கும்போது அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படும். ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், கையுறை, முகக்கவசம், ஹேன் சனிடைசர் கொடுத்திருக்கிறோம். ஓட்டுநர் அருகே பயணிகள் செல்லாத அளவில், தடை செய்து இருக்கிறோம். அதனால், ஓட்டுநர், நடத்துனர்களுக்கு உண்டான பாதுகாப்பை நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி தனியார் டிராவல் ஏஜென்ஸிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை? என்ற செய்தியாளர்கள் கேட்டதற்கு, “பொதுமக்கள் பாதிக்கப்படும்படியான நடவடிக்கைகள் அரசின் கவனத்துக்கு வந்தால் அதுகுறித்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.” என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது? என்ற கேள்விக்கு, “அது தவறான தகவல்.  அது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார். பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதே போல, பேருந்து பாஸ் கடந்த முறை 8 நாள் மட்டுமே பயணிகள் உபயோகித்துள்ளார்கள். அதனால், அது செப்டம்பர் 15ம் தேதி வரை செல்லுபடியாகும். புதிதாக மாதாந்திர பேருந்து பாஸ் நாளை முதல் கொடுக்க ஆரம்பித்துவிடுவோம்.

பேருந்தில் ஒரு சீட்டுக்கு ஒருவர்தான் அமர வேண்டும். ஆனால், கடந்தமுறை பயணிகள் அதிக அளவில் வந்துவிட்டதால், கிராமப்புறத்தில் பேருந்துகளை நிறுத்தாமல் சென்றதால் ஓட்டுநர், நடத்துனரை தாக்கிய சம்பவங்கள் நடந்தன. அது போல சம்பவங்கள் நடக்க கூடாது. அதனால், தேவை இருக்கிற இடங்களில் நாங்கள் வண்டியை அதிகப்படுத்துவோம்.

கிராமப்புறங்களில் இருந்து வேலைக்கு வருகிறவர்களுக்கு காலை மாலை நேரங்களில்தான் எங்களுக்கு கொஞ்சம் பிரச்னையாக இருக்கிறது. அந்த மாதிரி இடங்களில் பேருந்துகளை அதிகப்படுத்தச் சொல்லியிருகிறோம்.” என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Today govt public bus transport resumed minister mr vijayabaskar press meet

Next Story
பொதுச்செயலாளர், பொருளாளர் யார்? : 9ம் தேதி கூடுகிறது திமுக பொதுக்குழுTamil News Today Live
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com