தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை அரசு கட்டாயமாக்கி கடந்த 2 மாதங்களாக செயல்படுத்தி வந்தது. இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் பெறுபவர்கள் என அனைத்து பயனர்களும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்தது. இதற்காக அரசு சார்பில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
மின் நுகர்வோர் குறித்த முறையான தகவல்களைப் பெறும் நோக்கில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் நடைமுறையை அரசு கொண்டு வந்தது. நேரடியாக மின் வாரிய பிரிவு அலுவலகம் சென்றும், ஆன்லைன் மூலமாகவும் இணைக்கும் படி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக அரசின் TANGEDCO அதிகாரப்பூர்வ லிங்க்-களை வெளியிட்டது. கடந்தாண்டு நவம்பர் 15-ம் தேதி இ.பி- ஆதார் இணைக்கும் பணி தொடங்கப்பட்டது. டிசம்பர் 31-ம் தேதிக்குள் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும் இதற்கான கால அவகாசம் இன்று (பிப்ரவரி 28) வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டது. இதுவரை 99 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மீதவுள்ளவர்களும் இன்றைக்குள் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கம் சென்று இணைக்கலாம். http://www.tangedco.gov.in என்ற பக்கம் சென்று இணைக்கலாம். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள். மேலும் அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil