Advertisment

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்..! இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம்

‘ஜெ.ஜெயலலிதா என்னும் நான்...’ என்கிற கம்பீர குரலை உதிர்த்த ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று! இதையொட்டி அஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jeyalalitha, jeyalalitha death anniversary, aiadmk, jeyalalitha memorial

‘ஜெ.ஜெயலலிதா என்னும் நான்...’ என்கிற கம்பீர குரலை உதிர்த்த ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று! இதையொட்டி அஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

Advertisment

ஜெ.ஜெயலலிதா நடிகையாக தமிழ் மக்களுக்கு அறிமுகமாகி, ஆளுமை மிக்கத் தலைவராக மனதில் நிற்கிறார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அதிமுக.வின் ஒரு அணிக்கு தலைமை தாங்கி, தோல்வியை எதிர்கொண்டு, பிறகு உடைந்த அணிகளை இணைத்து, கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர். அடையாத உயரத்தில் கட்சியை கொண்டு நிறுத்தியவர் ஜெயலலிதா. ஒரு பெண்மணியாக இதை அவர் சாதித்தது பெருமைக்குரியது.

ஜெயலலிதா காலத்தில் அதிமுக பெற்ற வெற்றிகளில் முக்கியமானவை இவை! 1991-ம் ஆண்டு தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அதிமுக. ஆட்சியில் அமர்ந்தது. 1998 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்று அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்தது.

2001 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது. 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார். 2011 உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்தில் அப்போது இருந்த 10 (இப்போது 12) மாநகராட்சிகளிலும் அதிமுக வெற்றிபெற்றது.

2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37-ல் வென்று சாதனை படைத்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது. 2016 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227-ல் நேரடியாகவும், 7-ல் அதிமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்திலும் போட்டியிட்டன. இவற்றில் 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. 1984-ம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016-ல் தான்.

2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 (37 மக்களவை + 13 மாநிலங்களவை) ஆக உயர்ந்தது. இது தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை. 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் என தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் பெரிதாக கூட்டணி இல்லாமல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றிவாகை சூடியது.

இன்னொருபுறம் எம்.ஜி.ஆர். வழியில் சாதாரண மக்களை மனதில் வைத்து அவர் செயல்படுத்திய திட்டங்கள் கட்சிக்கு அப்பாற்பட்ட மக்கள் மத்தியிலும் அவரை விரும்பத்தக்க தலைவராக கொண்டு நிறுத்தியது. பள்ளி மாணவர்களுக்கு செருப்பு, சீருடையில் ஆரம்பித்து பென்சில் வரை இலவசம், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு லேப் டாப் என இளம் தலைமுறையினர் மீது அக்கறை கொண்டவராக, அவர்களது மனம் கவர்ந்தவராக ஜெயலலிதா திகழ்ந்தார்.

தமிழ்நாட்டில் முதல்வர் பதவி ஏற்கிற ஒவ்வொருவரும் தங்கள் பெயரைக் கூறி சொல்கிற வாசகம்தான் அது! ஆனால், ‘ஜெ.ஜெயலலிதா என்கிற நான்...’ என்கிற கணீர் குரலின் மகத்துவமே தனி! ‘எனக்கு எல்லாமே நீங்கள்தான். உங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வுதான் என்னுடையது’, ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என அவர் உதிர்த்த வாசகங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தலுக்காக சொல்லப்பட்டவையாக இருக்கலாம். ஆனால் ஜெயலலிதா அபிமானிகள் மத்தியில் அந்த வாசகங்கள் மந்திரச் சொற்களாக தெரிகின்றன.

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று (டிசம்பர் 5) அதிமுக சார்பிலும் டிடிவி தினகரன் அணி சார்பிலும் சென்னையில் அவரது நினைவிடத்தை நோக்கி அமைதி ஊர்வலம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் அதிமுக.வினரைத் தாண்டி, கட்சி சார்பற்றவர்களும் ஜெயலலிதாவின் மறைவை இழப்பாக அனுசரிக்கிறார்கள். ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு இதுதான் வெற்றி!

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment