Tamil nadu budget 2019 and Today News In Tamil: தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்காக இங்கு தொகுத்து தரப்படுகிறது.
1. தமிழ்நாடு அரசின் 2019-2020 ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘இது உதவாக்கரை பட்ஜெட்’ என குறிப்பிட்டார். பல எதிர்க்கட்சிகள், ‘பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க திட்டங்கள் இல்லை’ என விமர்சித்தன.
கஜ புயல் நிவாரணத்திற்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களை ஆளும்கட்சியினர் நல்ல விஷயமாக சுட்டிக்காட்டுகிறார்கள்.
2. தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
3. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசித்ததாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
4. இரட்டை இலை சின்ன வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
5. கொடநாடு கொலை வழக்கில் சயான் மற்றும் மனோஜூக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமினை ரத்து செய்து நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
6. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் திங்கள் முதல் வியாழன் வரை 4 நாட்கள் நடைபெறுகிறது என அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு பின் சபாநாயகர் தனபால் பேட்டி அளித்தார்.
7. தேர்தலையொட்டி, தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.
8. அதிமுக செய்தி தொடர்பாளராக வழக்கறிஞர் கே.சிவசங்கரி நியமனம் செய்யப்பட்டார். கட்சியினர் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இபிஎஸ்-ஓபிஎஸ் விடுத்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
9. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு விசாரணைக்கு ஆஜரானார் ப.சிதம்பரம்.
10. பெரம்பலூர் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ராஜா(33) என்பவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
11. நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் நடத்திட வேண்டுமென தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். கனிமொழி தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தை வழங்கினர்.