Advertisment

Tamil News Highlights: தஞ்சையில் ஆசிரியையை கொன்ற குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும் - மு.க.ஸ்டாலின்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mk stalin releaf to teacher

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த வகையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.73க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.92.32க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம் : சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 47.07% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 55.69% ; புழல் - 72.12% ; பூண்டி - 15.88% ; சோழவரம் - 10.64% ; கண்ணன்கோட்டை - 61.4%

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
  • Nov 21, 2024 04:17 IST
    தஞ்சை தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் திருவள்ளுவன் பணியிடை நீக்கம் - ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு

    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் ரவி உத்தரவிட்ட்டுள்ளார். டிசம்பர் 12ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது பணம் பெற்றுக்கொண்டு உரிய கல்வித் தகுதி இல்லாத 40 பேரை பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களில் அமர்த்தியதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    2019ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். உரிய தகுதி இல்லாத அந்த 40 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் மாளிகையில் இருந்து  துணைவேந்தர் திருவள்ளுவனிடம் இருமுறை விளக்கம் கேட்டதாகவும், அதற்கு முறையான பதிலை தராமல் காலம் கடத்தியதாலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Nov 20, 2024 21:46 IST
    ‘எடப்பாடி பழனிசாமியா – எரிச்சல் சாமியா?’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “எடப்பாடி பழனிசாமியா – எரிச்சல் சாமியா என்ற அளவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மக்கள் நல்வாழ்வுத்துறை மீது அவதூறு பரப்புகிறார். திராவிட மாடல் அரசின் மருத்துவத் துறையின் சாதனை ஐக்கிய நாடுகள் சபையால் பாராட்டப்பட்டுள்ளது. இந்த விருது உலக அளவில் உச்சபட்ச அங்கீகாரம் என்பதை அவர் அறிந்திருப்பாரா என்பது ஐயமே” என்று காட்டாமாக பதிலடி கொடுத்துள்ளார்.



  • Nov 20, 2024 20:58 IST
    தஞ்சை பள்ளி ஆசிரியை குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

    தஞ்சை மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளி தற்காலிக தமிழ் ஆசிரியைரமணி, பள்ளி வளாகத்தில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • Nov 20, 2024 20:30 IST
    தஞ்சை பள்ளி ஆசிரியை கொலை: மிகவும் மிருகத்தனமானது; குற்றவாளிக்கு விரைவில் தண்டனை - ஸ்டாலின் உறுதி

    தஞ்சை அருகே பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகவும் மிருகத்தனமானது; காவல்துறையினரால் குற்றவாளி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது; இவ்வழக்கின் விசாரணை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Nov 20, 2024 20:01 IST
    தி.மு.க ஆட்சியை அகற்றுவதே மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஒரே வழி - சீமான் கடும் விமர்சனம்

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: “தி.மு.க ஆட்சியை அகற்றுவதே மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஒரே வழி; பள்ளி வளாகத்தில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டது மிகுந்த மன வேதனை அளிக்கிறது; நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் மீது கொலை தாக்குதல் மனதைக் கொதிக்கச் செய்கிறது” என்று கூறியுள்ளார்.



  • Nov 20, 2024 19:36 IST
    தஞ்சையில் கொலை நடந்த பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை; ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கவுன்சிலிங் - அன்பில் மகேஸ் அறிவிப்பு

    பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்: “தஞ்சை அருகே ஆசிரியை கொலை செய்யப்பட்ட அரசுப் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை; மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கவுன்சிலினங அளிக்கப்பட்ட பிறகே பள்ளி திறக்கப்படும். மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.



  • Nov 20, 2024 19:31 IST
    ஜார்க்கண்டில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி

    ஜார்க்கண்டில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 20, 2024 19:28 IST
    மகாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி

    மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 150 முதல் 170 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 110 முதல் 130 இடங்களையும் பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



  • Nov 20, 2024 19:16 IST
    தங்கச்சிமடத்தில் வெளுத்து வாங்கிய மழை

    ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. அங்கு வெறும் 3 மணி நேரத்தில் (1 மணி முதல் 4 மணி வரை) சுமார் 27.2 செ,மீ மழை கொட்டியுள்ளது. காலை 6 மணி முதல் 1 மணி வரை 5 செ.மீ மழை மட்டுமே பெய்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. மாலை 6 மணியுடன் மொத்தமாக 32.2 செ.மீ மழை பெய்துள்ளது. 



  • Nov 20, 2024 18:57 IST
    ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு 

    தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் அடுத்த பாடல் ‘காதல் பெயில்' வரும் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 



  • Nov 20, 2024 18:55 IST
    நாகை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு 

    நாகை மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை பெய்த மழையின் அளவு வெளியாகியுள்ளது. அதன்படி, நாகையில் 9.1 செ.மீட்டரும்,  திருப்பூண்டியில் 9.6 செ.மீட்டரும், வேளாங்கண்ணியில் 11.1 செ.மீட்டரும், திருக்குவளையில் 7.5 செ.மீட்டரும், தலைஞாயிறு-வில் 5.6 செ.மீட்டரும், வேதாரண்யத்தில் 11.0 செ.மீட்டரும், கோடியக்கரையில் 16.3 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. 



  • Nov 20, 2024 18:48 IST
    பாம்பனில் மேக வெடிப்பு  - கொட்டித் தீர்த்த மழை

    ராமநாதபுரம் மாவட்டம்  பாம்பனில் ஏற்பட்ட மேக வெடிப்பால் மழை கொட்டித்தீர்த்தது. வெறும் 3 மணி நேரத்தில் (11:30 - 2:30 மணி வரை?) 19 செ.மீ மழை கொட்டியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  



  • Nov 20, 2024 18:08 IST
    திருமண ஆவணப் படம் - நன்றி சொன்ன நயன்தாரா 

    தனது திருமண ஆவணப் படத்தில் காட்சிகளைப் பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் தந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா. உதயநிதி, ஷாருக் கானுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். 

    நடிகர் தனுசுடன் மோதல் ஏற்பட்ட நிலையில், அவரது பெயரைக் குறிப்பிட்டாமல் நன்றி தெரிவித்துள்ளார் நயன்தாரா. “உங்களை அணுகியபோது எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்று வழங்கியதை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன்” என்று நயன்தாரா தனது அறிக்கையில் கூறியுள்ளார். 



  • Nov 20, 2024 18:05 IST
    நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின்

    தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி, ஐதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 



  • Nov 20, 2024 17:54 IST
    4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    தென் தமிழகத்தில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக கனமழை முதல் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

    மேலும் ராமநாதபுரம், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • Nov 20, 2024 16:59 IST
    சட்ட ஒழுங்கில் அச்சம் உருவாக வாய்ப்பு - செல்வப்பெருந்தகை

    தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற அச்சம் மக்கள் மத்தியில் உருவாக வாய்ப்பு இருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.



  • Nov 20, 2024 16:47 IST
    உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்

    உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது. வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 



  • Nov 20, 2024 16:39 IST
    ஜார்க்கண்டில் 61.47 சதவீதம் வாக்குப்பதிவு

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் இரண்டாம் கட்ட தேர்தலில், பகல் 3 மணி நிலவரப்படி 61.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.



  • Nov 20, 2024 16:11 IST
    மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்

    சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி டி. கிருஷ்ண குமாரை, மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக குறைந்து, காலியிடங்கள் 9 ஆக அதிகரித்துள்ளது.



  • Nov 20, 2024 16:05 IST
    6 மணி நேரத்தில் 24 செ.மீ மழை

    ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் 6 மணி நேரத்தில் 24 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Nov 20, 2024 15:55 IST
    கள்ளக்குறிச்சி வழக்கு: மேல்முறையீடு செய்யக்கூடாது -இபிஎஸ்

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்த சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் அரசு தரப்பு மேல்முறையீடு செய்யக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



  • Nov 20, 2024 15:40 IST
    கிராம மக்களை வெளியேற்ற இடைக்கால தடை

    மதுரை மாவட்டம், சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் வழங்கியவர்களை அவர்கள் வசிக்கும் இடங்களை விட்டு வெளியேற்றக் கூடாது எனவும், மத்திய சட்டப்படி உரிய இழப்பீடு மற்றும் மறு வாழ்வு வழங்கிய பின்னர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • Nov 20, 2024 15:28 IST
    சி.பி.ஐ விசாரணை தேவையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

    கிருஷ்ணகிரி பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கின் விசாரணை அறிக்கையை ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.



  • Nov 20, 2024 15:18 IST
    நீதிமன்றத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு

    ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட ஆனந்தன் என்பவரை போலீசார் பிடித்தனர்.



  • Nov 20, 2024 15:09 IST
    இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - இபிஎஸ்

    குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 



  • Nov 20, 2024 14:55 IST
    தமிழக மீனவர்கள் கைது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும்,  விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.



  • Nov 20, 2024 14:17 IST
    மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்: வேதாந்தா நிறுவனம் விண்ணப்பிக்கவில்லை; தமிழ்நாடு அரசு

    மதுரை அட்டாப்பட்டி பகுதியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, வேதாந்தா நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பிக்கவில்லை. மத்திய அரசு அனுமதி அளித்துள்ள குறிப்பிட்ட பகுதி எது? எந்த அளவுகோளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • Nov 20, 2024 13:39 IST
    பழமையான ஆலமரம் விழுந்து 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

    ஆரல்வாய்மொழி அருகே நெல்லை - நாகர்கோவில் நெடுஞ்சாலையோரம் இருந்த பழமையான ஆலமரம் சூறைக்காற்றில் முறிந்து விழுந்தது.சுமார் மணிநேரம் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில்தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து மரத்தை வெட்டி அகற்றினர்



  • Nov 20, 2024 13:34 IST
    தஞ்சையில் ஆசிரியை கொலை: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

    தஞ்சையில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். இன்று மாலை சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல உள்ளேன் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டு முழுமையான விளக்கம் அளிக்கப்படும். சொந்த பிரச்சினையாக இருந்தாலும், இனி இதுபோன்று நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்  என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.



  • Nov 20, 2024 13:30 IST
    4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை

    திருவாரூர், நாகை, நெல்லை, குமரி 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • Nov 20, 2024 12:55 IST
    அன்பில் மகேஷ் கண்டனம்

    தஞ்சாவூரில் ஆசிரியை ரமணியை குத்தி கொன்றவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது என அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    சம்பவம் நடைபெற்ற தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு பள்ளிக்கு அமைச்சர்கள் கோவி.செழியன், அன்பில் மகேஷ் விரைகின்றனர். 

    விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் பள்ளிக்கு நேரில் செல்கிறார்



  • Nov 20, 2024 12:10 IST
    வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக்கொலை

    தஞ்சையில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்டார். 

    மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலை பள்ளியில் பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியை ரமணி குத்திக்கொலை. மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக ரமணி பணியாற்றி வந்துள்ளார் 

    காதல் பிரச்சினையில் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல், மதன் குமார் என்ற இளைஞர் ஆசிரியை ரமணியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 



  • Nov 20, 2024 11:50 IST
    பரப்புரையை இப்போதே தொடங்க ஸ்டாலின் வேண்டுகோள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் புறந்தள்ளி ஹிந்திக்கு விழா எடுப்பது, சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள் கொண்டு வருவது, தொடர் ரயில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்காததது, மாநில அரசுக்கான நிதியை விடுவிக்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    கடந்த 18 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் நிலையில், பிரதமர் மோடி அமைதி காப்பது அம்மாநிலத்தை ஒன்றிய அரசு கைவிட்டதாகவே தெரிகிறது. இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்த கோரிக்கை வைத்து தீர்மானம். 

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பரப்புரையை இப்போதே தொடங்க நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். 



  • Nov 20, 2024 11:27 IST
    "FDFS ரிவ்யூக்களை தடை செய்க" -தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்

    திரைப்படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்களை வைக்கும் யூடியூப் சேனல்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

    "திரையரங்கு உரிமையாளர்கள் தங்கள் வளாகங்களில் ரசிகர்களிடம் பேட்டி எடுக்க யூடியூப் சேனல்களை அனுமதிக்க கூடாது" எனவும் கூறியுள்ளது.



  • Nov 20, 2024 11:18 IST
    கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்

    கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி அமர்வு உத்தரவிட்டுள்ளது.



  • Nov 20, 2024 10:31 IST
    ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு

    கடந்த 5 நாட்களில் மட்டும் ஐயப்பன் கோயிலில் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 



  • Nov 20, 2024 10:24 IST
    திரையரங்கு வளாகத்தில் முதல் காட்சி ரசிகர் பேட்டியை தடை செய்ய வேண்டும்

    அனைத்து திரையரங்கு வளாகத்திலும் முதல் காட்சி ரசிகர் பேட்டியை தடை செய்ய வேண்டும் என திரையரங்கம் உரிமையாளர்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.



  • Nov 20, 2024 09:58 IST
    மனைவி, பிள்ளைகள் மீது பெட்ரோல் வீச்சு

    திருச்சி, திருவெறும்பூர் அருகே பூஜை அறையில் சாமி கும்பிட்டு கொண்டிருந்த மனைவி மற்றும் மகன்கள் மீது தந்தை பெட்ரோல் வீசியதில் மூவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி, மனைவியின் அதீத பக்தி பிடிக்காததால் ஆத்திரத்தில் பெட்ரோல் வீசியதாக தகவல்



  • Nov 20, 2024 09:46 IST
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.56.960க்கு விற்பனையாகிறது.



  • Nov 20, 2024 09:09 IST
    ரூ.15 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தல் வாகனம் மற்றும் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Nov 20, 2024 09:04 IST
    சென்னை விமான நிலையத்தில் இன்று வருகை/புறப்பாடு என 12 விமான சேவைகள் ரத்து

    சென்னை விமான நிலையத்தில் இருந்து புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட 6 புறப்பாடு மற்றும் வருகை விமானங்கள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 20, 2024 08:55 IST
    "கஸ்தூரி வழக்கை கருணையோடு அணுகுங்கள்" - நீதிபதி மனைவி

    நடிகை கஸ்தூரிக்கு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்ளது. எனவே கஸ்தூரியின் வழக்கை கருணையோடு அணுக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனின் மனைவி காமாட்சி கூறியுள்ளார்.



  • Nov 20, 2024 08:39 IST
    ஐயப்ப பக்தர்களுக்கு உதவ புதிய செயலி

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவ சுவாமி சாட்போட் என்ற வாட்ஸ்அப் செயலி மூலம் தேவையான வழிபட்டு தகவல்களை பெறலாம் என பத்தனம் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.



  • Nov 20, 2024 08:36 IST
    கடல் கண்காணிப்பு ஒத்திகை

     கடலோரப் பகுதிகளை பாதுகாக்கும் பொருட்டு, பாதுகாப்பு ஒத்திகையான SEA VIGIL (கடல் கண்காணிப்பு) தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் இன்று தொடங்கியது. இன்று மற்றும் நாளை நடக்கும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் கடற்படை, கடலோர காவல்படை, சுங்கத்துறை, CISF, கடலோர பாதுகாப்பு குழுமம், காவல்துறை, மீன்வளத்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவத்துறை, வனத்துறை, குடியுரிமைத்துறை மற்றும் துறைமுக பாதுகாப்பு ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள உள்ளனர்.



  • Nov 20, 2024 07:54 IST
    "எல்லாமே எதிர்பாராத முடிவாக உள்ளன" - ஏ.ஆர்.ரஹ்மான்

    30 ஆண்டுகளை எட்டுவோம் என நம்பியிருந்த நிலையில், முடிவை எட்டியிருக்கிறது திருமண வாழ்க்கை என சாய்ராவுடன் விவாகரத்து தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Nov 20, 2024 07:51 IST
    "தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள்" - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன்

    பெற்றோரின் விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து, தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள் என  ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Nov 20, 2024 07:37 IST
    வேதாரண்யத்தில் வெளுத்து வாங்கும் கனமழை

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் 29 செ.மீ மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது.



  • Nov 20, 2024 07:31 IST
    குற்றாலம் அருவியில் குளிக்க தடை

    தொடர் மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் இன்று பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.



  • Nov 20, 2024 07:27 IST
    கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு

    மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.



Tamilnadu Petrol Diesel Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment