தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 13 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர் மழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காரைக்காலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இதேபோல கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல இடி, மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக நெல்லை, திருவாரூர், தென்காசி மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“