1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட புத்தகம் 31.5.18 முதல் இணையத்தில் வெளியாகுகின்றன.
தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளி பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியது.
கடந்த 4 ஆம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் படி, இன்று(23.5.18) புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) வெளியிடப்படவில்லை. பாட புத்தகங்களை பதிவேற்றம் செய்வதில் சில சிக்கல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து மே 31ம் தேதி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
புதிய பாடப்புத்தகங்கள் வகுப்புகள் மற்றும் பாடங்கள் வாரியாக 31ம் தேதி முதல் இணையதளத்தில் வெளியாகும். பள்ளி மாணவர்கள் அனைத்து பாடப்புத்தகங்களையும் வகுப்புகள், பாடங்கள் வாரியாக தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் இணையதளத்தில் (www.textbooksonline.tn.nic.in) பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.