Live

News Highlights: கொரோனா தடுப்பு பணிகளுக்காக 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நியமனம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுகவின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் :

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில், 133 இடங்களில் தனித்து வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலினும், 34 அமைச்சர்களும் ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இன்று, திமுக வின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல், கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 ரேஷன் கடைகளில் வழங்குதல் போன்ற முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்துக்கு 419 மெட்ரிக் டன் ஆக்சிஜன் :

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 220 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உயர்த்தி வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். நேற்று, முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி ஆக்சிஜன் பற்றாக்குறை, தமிழகத்தில் கொரோனா சூழல் குறித்து விவாதித்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த ஆக்சிஜன் அளவை 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

24-ம் தேதி வரை முழு ஊரடங்கு :

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், தவிர்க்க முடியாத சூழலில், ஊரடங்கு விதிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டார். முதல்வரின் உத்தரவின் அடிப்படையில், நாளை காலை 4 மணி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. ஊரடங்கின் போது, மளிகை, பலசரக்கு, காய்கறி கடைகள் நண்பகல் வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்களில் குறிப்பிட்ட நேரங்களில் பார்சல் சேவைக்கும், தேநீர் கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நாள்களில் டாஸ்மாக் கடைகள் முற்றிலுமாக மூடப்படுகின்றன. கல்வி நிலையங்கள் அனைத்துக்குமான தடை தொடர்கிறது. பொது போக்குவரத்து முடக்கப்படுகிறது. வெளிநாடு, வெளி மாநில பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாளை காலை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால், சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். பயணிகளுக்கு வசதியாக நேற்றும் இன்றும் 24 மணி நேரமும் பேருந்து சேவை வழங்கப்பட்டு வருவதோடு, சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Live Updates
4:12 (IST) 9 May 2021
தமிழகத்தில் தாமரை மலர்ந்துள்ளது – பாஜக தலைவர் எல்.முருகன்

ஆளும்கட்சிக்கு ஆலோசனை வழங்க தயார், தவறுகளை சுட்டிக்காட்டவும் தயங்க மாட்டோம் என்று பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். மேலும், சட்டமன்றத்தை தாங்கிப் பிடிக்கும் 4 தூண்களாக பாஜக எம்எல்ஏக்கள் இருப்பார்கள் என்றும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்றார்கள்; தற்போது தாமரை மலர்ந்துள்ளது என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்

2:59 (IST) 9 May 2021
கொரோனா தடுப்பு பணிகளுக்காக 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நியமனம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனா தடுப்பு பணிகளுக்காக 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை – மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, செங்கல்பட்டு – தா.மோ.அன்பரசன், கோவை – அர.சக்கரபாணி, கா.ராமச்சந்திரன், சேலம் – செந்தில் பாலாஜி, திருவள்ளூர் – சா.மு.நாசர், மதுரை – பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், ஈரோடு – முத்துசாமி

1:47 (IST) 9 May 2021
தமிழகத்தில் இன்று 28,897 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஒரேநாளில் 236 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,80,259 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 15,648 ஆக உயர்ந்துள்ளது.

1:41 (IST) 9 May 2021
மே 11 முதல் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஆக்ஸிஜன் கிடைக்கும்- அமைச்சர் தங்கம் தென்னரசு

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் மே 11ஆம் தேதி முதல் கிடைக்கும் எனவும், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தொழில்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

1:21 (IST) 9 May 2021
ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும் -அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கிற்கு தொழில்துறையினர் ஒத்துழைப்பு தர வேண்டும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1:09 (IST) 9 May 2021
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை-ஸ்டாலின் உறுதி

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை எனவும், தமிழகத்தில் மே 24க்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வராது எனவும் தொழில்துறையினர் உடனான கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

12:30 (IST) 9 May 2021
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு வரவில்லை.

12:20 (IST) 9 May 2021
தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். நாளைமுதல் பொதுமுடக்கம் அமலுக்கு வரும் நிலையில் தொழில் நிறுவனங்களின் தேவை குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல். ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

11:57 (IST) 9 May 2021
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா கால பணியில் இருந்து விலக்கு

சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா கால பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்ரியா கொரோனா பாதிப்பால் இறந்த நிலையில் சேலம் சுகாதாரத்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.

11:20 (IST) 9 May 2021
தமிழக பாஜகவின் சட்டமன்ற குழுத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு

பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தமிழக பாஜகவின் சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

11:18 (IST) 9 May 2021
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மாலை 6 மணிக்குள் பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, தென்காசி, தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10:37 (IST) 9 May 2021
தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முக சுந்தரம் நியமனம்

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆர்.சண்முக சுந்தரம், கடந்த 1996 – 2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக்காலத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பதவி வகித்துள்ளார்.

10:20 (IST) 9 May 2021
டாஸ்மாக்கில் ஒரேநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை; சென்னை முதலிடம்

தமிழகத்தில் மே 9ம் தேதி ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனையானது. சென்னையில் அதிகபட்சமாக ரூ.100.43 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.87.28 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.79.82 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.76.12 கோடியும் மது விற்பனை நடந்துள்ளது.

10:19 (IST) 9 May 2021
டாஸ்மாக்கில் ஒரேநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை; சென்னை முதலிடம்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். நேற்று காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை விற்பனை நேரமாக இருந்த நிலையில் அரசின் திடீர் உத்தரவின் காரணமாக டாஸ்மாக் விற்பனை நேரம் மாற்றப்பட்டது.

சனி, ஞாயிறு 2 நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்றும் அதன் பின்னர் 14 நாட்களுக்கு மூடப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பல மதுக்கடைகளில் மதுபிரியர்கள், மதுபாட்டில்களை வாங்கி இருப்பு வைத்து கொள்ளும் வகையில் பெட்டி பெட்டியாக மொத்தமாக வாங்கி சென்றனர். இதனால் நேற்று ஒரே நாளில் ரூ.426.24 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது.

10:02 (IST) 9 May 2021
காவல்துறையினர் பொதுமக்களிடம் மிகுந்த கனிவோடு நடந்துகொள்ள வேண்டும் – டிஜிபி

“பணியின்போது காவல்துறையினர் பொதுமக்களிடம் மிகுந்த கனிவோடு நடந்துகொள்ள வேண்டும்; பொதுமக்களிடம் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ நடந்துகொள்ளக்கூடாது” என்று தமிழக டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார்.

9:12 (IST) 9 May 2021
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் வேளாண்மைத்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடியை சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

8:10 (IST) 9 May 2021
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும்.

அரசு தனியார் நிறுவனங்கள் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்க ஊக்குவிக்கப்படும். எக்காரணம் கொண்டும் மருத்துவ ஆக்ஸிஜன் வீணாக அனுமதிக்கக் கூடாது. மருதுவ ஆக்ஸிஜன் முறையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டிஸிவிர் மருந்து தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். உடங்கை முழுமையாக அமல்படுத்த உறுதி செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

7:20 (IST) 9 May 2021
திமுகவினர் மாற்றுக் கட்சியினருடன் நட்புடன் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

“ஜனநாயக களத்தில் எதிர் எதிர் அணிகளாக மோதுவது இயல்பு என்றாலும் நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள்: மாற்றுக் கட்சி தோழர்களோடு திமுகவினர் நட்புணர்வுடன் மக்கள் பிரச்சனைகளை அணுகி தீர்வு காண வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

6:55 (IST) 9 May 2021
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான கட்டளை மையத்திற்கு அதிகாரிகள் நியமனம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான கட்டளை மையத்திற்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டளை மையத்திற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக தாரீஸ் அகமத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆக்ஸிஜன் தேவை, இருப்பு, படுக்கை வசதிகள், குறித்த விவரங்களை கட்டளை மையம் மூலம் தெரிந்துகொள்ளலாம். மக்கள் 104 என்ற எண்ணை தொடர்புகொண்டு விவரங்களை அறியலாம்.

6:53 (IST) 9 May 2021
முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் சந்தானம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினை நடிகர் சந்தானம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

6:50 (IST) 9 May 2021
டெல்லியில் மே 17 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

தலைநகர் டெல்லியில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில், 17ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

6:24 (IST) 9 May 2021
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் உட்பட 33 அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனா நிலவரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

6:11 (IST) 9 May 2021
‘எல்லோர்க்கும் எல்லாம் என்பதே லட்சியம்!’ – திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றப் பின், கட்சித் தொண்டர்களுக்கு முதல் கடிதத்தை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் எல்லோர்க்கும் எல்லாம் என்பதே லட்சியம் எனவும், தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

6:07 (IST) 9 May 2021
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் உட்பட 33 அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். கொரோனா நிலவரம், முழு ஊரடங்கு உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

6:03 (IST) 9 May 2021
ஸ்டாலினுக்கு நடிகர் பிரபு வாழ்த்து!

தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலினை நடிகர் பிரபு அவர்கள் நேரில் சந்தித்து தனது அன்னை இல்லம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தார்.

6:01 (IST) 9 May 2021
நடிகர் மோகன்லால் அன்னையர் தின வாழ்த்து!

நடிகர் மோகன்லால் தனது தாயாருடன் சிறு வயதில் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அந்த புகைப்படமானது தற்போது வைரலாகி வருகிறது.

5:51 (IST) 9 May 2021
கொரோனா தடுப்பு பணிகள்; தமிழகத்துக்கு 532 கோடி ஒதுக்கீடு!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்துக்கு ரூ.533.2 கோடியை மத்திய நிதியமைச்சகம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. 25 மாநிலங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923.8 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.

5:42 (IST) 9 May 2021
12 சித்தா கொரோனா சிகிச்சை மையங்கள்; சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு. பேட்டி!

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு 12 இடங்களில் சித்தா சிகிச்சை மையங்கள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நோயாளிகளுக்கு சித்தா சிகிச்சை மையத்திலேயே சிகிச்சை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்..

5:38 (IST) 9 May 2021
‘தாயிற் சிறந்த கோயில் இல்லை!’ – பாமக நிறுவனர் ராமதாஸ் அன்னையர் தின வாழ்த்து!

தாயாக இருந்து குழந்தைகளையும், குடும்பங்களையும் காக்கும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆக்கல், காத்தல், தீமைகளை அழித்தல் ஆகிய 3 சக்திகளையும் கொண்டவர்கள் பெண்கள். தாயிற் சிறந்த கோயில் இல்லை. அவர்களை வணங்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

5:28 (IST) 9 May 2021
முழு ஊரடங்கு எதிரொலி; 426 கோடிக்கு மது வாங்கிய மதுப் பிரியரகள்!

நாளை முதல் இரு வாரங்களுக்கு, முழு ஊரடங்கு என்பதால்தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை மண்டலத்தில் ரூ.100 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.82 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகி உள்ளது.

5:23 (IST) 9 May 2021
முதல்வர் ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து!

எனை ஈன்ற தாய் உள்ளிட்ட அனைத்து தாயாருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகளை தெரிவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மகளிர் நலத்துடன் – அன்னையர் நலனையும் தமிழக அரசு காக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

5:21 (IST) 9 May 2021
ஆக்சிஜன் உற்பத்தி; தொழில்துறையினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

தமிழகத்தில், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக , இன்று மாலை தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

Web Title: Today tamil news live stalin ministry meeting tamilnadu covid lockdown people

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express