scorecardresearch
Live

News Highlights: தடுப்பூசி மூலப்பொருட்கள்; மோடி- ஜோ பைடன் ஆலோசனை

News Highlights: கொரோனா நிலைமை பற்றி நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் உரையாடியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News Highlights: தடுப்பூசி மூலப்பொருட்கள்; மோடி- ஜோ பைடன் ஆலோசனை

Today Tamil News : தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

தமிழகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் :

கொரோனா வைரஸின் தீவிர பரவலால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் நிலவி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தியை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் முக்கிய முடிவுகளை எட்டுவதற்காக முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஞாயிறு முழு ஊரடங்கு நிறைவு :

தமிழகத்தில், ஞாயிறு முழு ஊரடங்கு சுமார் 30 மணி நேரங்கள் நீடித்தது. முழு ஊரடங்கின் போது, தேவையிலாமல் சுற்றித் திரியும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், சென்னையில் மட்டும் 572 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு :

இந்தியாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா பரவலின் இரண்டாவது அலை, தமிழகத்தையும் உலுக்கி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 15,659 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 4,206 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் :

தமிழகத்தில் 30 மணி நேர முழு ஊரடங்கு முடிவடைந்திருக்கக் கூடிய நிலையில், தமிழக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுகிறது. ஜிம்கள், மதுபான பார்கள், கேளிக்கை அரங்கங்கள், பெரிய அரங்குகள், வணிக வளாகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அனைத்து வழிபாட்டித் தளங்களும் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பியூட்டி பார்லர்கள், சலூன்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல், தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தவிர்த்து, பிற மாநிலங்கள், நாடுகளிலிருந்து வருவோர்க்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் விதிக்க மாநிலங்களை அறிவுறுத்திய மத்திய அரசு :

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டுன் எனவும், தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றால், சுகாதார உள்கட்டமைப்புகளால் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு :

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜனுக்கு கடும் பற்றாக்குறை நிலவுவதால், பல நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இதனிடையே, மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் பயன்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Live Updates
22:35 (IST) 26 Apr 2021
கோவிட் நிலைமை பற்றி அமெரிக்க ஜோ பைடன் உடன் உரையாடினார் பிரதமர் மோடி

கோவிட் நிலைமை பற்றி இன்று அமெரிக்க ஜோ பைடன் உடன் உரையாடியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: “இன்று ஜோ பைடன் ஒரு பயனுள்ள உரையாடலைக் மேற்கொண்டார். இரு நாடுகளிலும் உருவாகி வரும் கோவிட் நிலைமை குறித்து விரிவாக விவாதித்தோம். இந்தியாவுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்தேன்.

ஜோ பைடனுடனான எனது விவாதம் தடுப்பூசி மூலப்பொருட்கள் மற்றும் மருந்துகளின் மென்மையான மற்றும் திறமையான விநியோகச் சங்கிலிகளின் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டியது. இந்தியா-அமெரிக்க சுகாதார கூட்டுறவு மூலம் COVID-19 இன் உலகளாவிய சவாலை எதிர்கொள்ள முடியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

22:14 (IST) 26 Apr 2021
புதுச்சேரியில் ஏப்ரல் 30ம் தேதி வரை அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புதுச்சேரியில் ஏப்ரல் 30ம் தேதி வரை அனைத்து மதுக் கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறை எச்சரித்துள்ளது.

21:36 (IST) 26 Apr 2021
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மீன், கோழி, இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

சனிக்கிழமையும் மீன், இறைச்சி கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சனிக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

21:31 (IST) 26 Apr 2021
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி – உத்தரக்காண்ட் அரசு அறிவிப்பு

உத்தரகாண்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

20:10 (IST) 26 Apr 2021
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,684 பேருக்கு கொரோனா; 94 பேர் பலி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதியதாக 15,684 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 94 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

19:55 (IST) 26 Apr 2021
கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட இந்தியா தயாராகி வரும் நிலையில் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

18:45 (IST) 26 Apr 2021
கூவத்தூர் அருகே தனியார் – அரசு பேருந்து மோதி விபத்து; 4 பேர் பலி

கூவத்தூர் அருகே காத்தான்கடை என்ற இடத்தில் தனியார் – அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் கவலைக்கிடம். மேலும், காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

18:18 (IST) 26 Apr 2021
தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம் – உள்துறை அமைச்சகம் அறிவுரை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் நடமாட்டத்தைக் குறைக்க, இரவு நேரங்களில் தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கலாம் என மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.

18:13 (IST) 26 Apr 2021
மே 1 முதல் 50% பணியாளர்களுடன் உயர் நீதிமன்றம்செயல்படும் – பதிவாளர்

கொரோனா பரவல் காரணமாக மே 1 ஆம் தேதி முதல் 50% பணியாளர்களுடன் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை செயல்படும் என உயர் நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

17:30 (IST) 26 Apr 2021
கொரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை

கொரோனா தடுப்பூசி மையங்களை அதிகரிக்க மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாநிலங்களிடம் இருப்பில் உள்ள ரெம்டெசிவிர் மருந்துகள், தடுப்பூசி மருந்துகள், படுக்கை வசதிகள் உள்ளிட்ட தகவல்களை வெளிப்படையாக அறிவிக்கவும் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

17:19 (IST) 26 Apr 2021
கொரோனா தடுப்பூசி விலை உயர்வு; பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கொரோனா தடுப்பூசி விலை உயர்வு குறித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். மேலும், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் எனவும், மத்திய அரசே மொத்தமாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

17:06 (IST) 26 Apr 2021
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் ரூ.35 லட்சம் நிதியுதவி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் இந்தியாவின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய ரூபாய் 35 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இந்த 35 லட்சம் ரூபாயை நிதியை பிரதமரின் கொரோனா நிவாரண நிதியுதவி திட்டத்திற்கு பாட் கம்மின்ஸ் அளித்துள்ளார். சக ஐபிஎல் வீரர்களும் நிதியுதவி அளிக்க பாட் கம்மின்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

16:54 (IST) 26 Apr 2021
1000 டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி – வேதாந்தா நிறுவனம்

ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தயாராக உள்ளோம் என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்வது குறித்து நிபுணர் குழுவுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

16:43 (IST) 26 Apr 2021
உச்ச நீதிமன்றத்தில் கொரோனா சிகிச்சை

உச்ச நீதிமன்றத்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். டெல்லியில் கொரோனா சிகிச்சைக்கு படுக்கை வசதியின்றி ஏராளமானோர் தவித்து வரும் நிலையில் இந்த அனுமதியை தலைமை நீதிபதி வழங்கியுள்ளார்.

16:38 (IST) 26 Apr 2021
மே 1, 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு; உயர் நீதிமன்றம் பரிந்துரை

வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாளான மே 1, மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ஆம் தேதிகளில் தமிழகத்தில் முழுஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. முழுஊரடங்கு தொடர்பாக ஏப்.28ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பை வெளியிடலாம் எனவும், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் பணியில் ஈடுபடுவோரை மட்டும் அனுமதிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

16:24 (IST) 26 Apr 2021
தமிழில் தேசிய கல்விக் கொள்கை

தேசிய கல்விக் கொள்கையை தமிழ் மொழியில் மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டது. தேசிய கல்விக் கொள்கை மொழிப்பெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

15:52 (IST) 26 Apr 2021
ஸ்டெர்லைட் : ஒவ்வாமையுடன் ஏற்கிறோம் – திருமாவளவன்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதியளிக்க கோரிய முடிவை ஒவ்வாமையுடன் ஏற்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக திறக்கப்படுவதற்கு இது வழிவகுத்து விடக்கூடாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

15:24 (IST) 26 Apr 2021
திமுக ஆட்சிக்கு பின் ஸ்டெர்லைட் திறக்கப்படாது

மருத்துவ ஆக்சிஐன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு எந்தச் சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப்படாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

15:20 (IST) 26 Apr 2021
மீண்டும் போர்க்களமாகும்-சீமான் எச்சரிக்கை

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சித்தால் தமிழகம் போர்க்களமாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

15:17 (IST) 26 Apr 2021
கார்நாடகாவில் மீண்டும் பொதுமுடக்கம்

கொரோனா பரவல் காரணமாக கர்நாடக மாநிலம் முழுவதும் அடுத்த 14 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை இரவு முதல் பொது முடக்கம் அமலுக்கு வரும் என முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

14:25 (IST) 26 Apr 2021
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினர் குவிப்பு

ஆக்ஸிஜன் தயாரிப்பிற்காக ஆலையை திறக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் போராட்டம் நடத்தலாம் என்று எண்ணி, தென்காசி மாவட்ட காவல் கணிப்பாளர் தலையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

13:59 (IST) 26 Apr 2021
ரெம்டெசிவிர்

சென்னை கீழ்பாக்கத்தில் ரெம்டெசிவிர் மருந்துகளை விற்க பொது விற்பனை கூடம் 2 அல்லது மூன்று நாட்களில் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கில் தமிழக அரசு தகவல்.

13:54 (IST) 26 Apr 2021
முகவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்

முகவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அலுவலர்கள் மற்றும் முகவர்கள் அனைவரும் தடுப்பூசிகளை பெற்றிருக்க வேண்டும் என்று சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

13:32 (IST) 26 Apr 2021
அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 5 தீர்மானங்கள்
  • ஆலைக்கு தற்காலிக அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்ஸிஜனில் தமிழகத்திற்கு முன்னுரிமை
  • நான்கு மாதங்களுக்கு மட்டுமே மின்சார அனுமதி
  • ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பகுதியில் நேரடி தொடர்புடைய தொழில்நுட்ப பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி
  • தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆலையை நான்கு மாதங்களுக்கு இயக்க அனுமதி.
  • தேவையைப் பொறுத்து இந்த காலம் நீடிக்கப்படலாம்.
  • 13:19 (IST) 26 Apr 2021
    பாகுபாடு காட்டியது ஏன்?

    ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக என்பதை விட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா வேண்டாமா என்பதற்காகவே இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காமல் பாகுபாடு காட்டியது ஏன் என்று விசிக தலைவர் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

    12:49 (IST) 26 Apr 2021
    ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க குழு அவசியம்

    தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்த பிறகு தான் மற்ற மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்க வேண்டும் என்றும் ஆலையை கண்காணிக்க குழு அவசியம் என்றும் கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

    12:25 (IST) 26 Apr 2021
    இந்தியாவிற்காக பிரார்த்தணைகள்; ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்

    இந்தியாவில் கொரோனா தொற்று உச்சமடைந்து வரும் நிலையில், பலரும் இந்தியாவிற்காக பிரார்த்தணைகள் என்பதை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமார் இந்தியாவிற்காக பிரார்த்தணைகள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது, அது வைரலாகி வருகிறது.

    12:18 (IST) 26 Apr 2021
    விவேக் குடும்பத்தை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல்!

    சின்னக்கலைவானர் என போற்றப்பட்ட நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன், மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், இன்று நடிகர் விஜய் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    11:58 (IST) 26 Apr 2021
    ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி; அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

    தற்போது நிலவி வரும் ஆக்சிஜன் பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வர, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்க முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உள்ளது.

    11:38 (IST) 26 Apr 2021
    நாட்டில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல. ஆலையை மூடியதே தமிழக அரசு தான் ஆனால் நாட்டில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது என்று முதல்வர் பழனிசாமி கூட்டத்தில் பேசியுள்ளார்.

    11:36 (IST) 26 Apr 2021
    ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் மின்சாரம்

    ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் மின்சாரம் வழங்கலாம் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி மக்களின் மனநிலையை புரிந்து ஆலைக்கு அனுமதி வழங்கலாம் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் பேச்சுவார்த்தை

    11:13 (IST) 26 Apr 2021
    தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜன் தமிழகத்திற்கு மட்டுமே; இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

    ஸ்டெர்லைட் ஆலையை அரசே கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆக்சிஜன் தயாரிக்கலாம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் உற்பத்தி ஆகும் ஆக்சிஜனை தமிழகத்தை தவிர பிற மாநிலங்களுக்கு வழங்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    11:08 (IST) 26 Apr 2021
    மக்களுடன் பேசி முடிவெடுக்க வேண்டும், சிபிஎம் கே. பாலகிருஷ்ணன்!

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே முழுமையாக கையகப்படுத்தி ஆக்சிஜனை உற்பத்தி செய்யலாம். இருப்பினும், மக்களுடன் கலந்து பேசி தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    10:56 (IST) 26 Apr 2021
    அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த விசிக!

    ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் கூட்டத்தை விசிக புறக்கணித்துள்ளது. அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் 8 கட்சியை மட்டும் அழைத்திருப்பதற்கு ரவிக்குமார் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    10:52 (IST) 26 Apr 2021
    மாவட்ட, மாநில அளவில் கண்காணிப்புக் குழு; கனிமொழி எம்.பி கருத்து!

    ஸ்டெர்லை ஆலை வழக்கு தொடர்பான விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் கலந்துக் கொண்ட தூத்துக்குடி திமுக எம்.பி.கனிமொழிஉ, ‘ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும் மின்சாரம் வழங்கக் கூடாது எனவும், மாவட்ட மாநில அளவில் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

    10:49 (IST) 26 Apr 2021
    ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்; திமுக கருத்து.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக மட்டும் திறக்கலாம் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன் உற்பத்தியை தவிர்த்து வேறு எந்த செயல்பாட்டுக்கும் அனுமதி வழங்க கூடாது என நடைபெற்று வரும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக கருத்து தெரிவித்துள்ளது.

    10:41 (IST) 26 Apr 2021
    இந்தியாவின் நிலைமை மன வருத்தத்தை உண்டாக்குகிறது; மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா

    இந்தியாவில் கொரோனா பரவலின் தற்போதைய சூழல் மிகுந்த மன வருத்தத்தை உண்டாக்குவதாகவும், அமெரிக்கா அரசு இந்தியாவுக்கு உதவ முன் வந்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும் மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கான ஆக்சிஜன் செறிவூட்டுகள் கொள்முதல் செய்யப்படுவதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உதவும் விதமாக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    10:35 (IST) 26 Apr 2021
    இந்தியாவிற்கு 135 கோடி நிதி உதவி; கூகுள் நிறுவனம்!

    இந்தியாவில் கொரோனா பரவல் நிலவரம் மோசமடைந்துள்ள நிலையில், மருத்துவ உள்கட்டமைப்புகளுக்காக கூகுள் நிறுவனம் இந்திய மக்களுக்கு உதவும் விதமாக, ரூ.135 கோடியை வழங்குவதாக கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

    10:29 (IST) 26 Apr 2021
    அனைத்துக் கட்சி கூட்டம்; கனிமொழி, எல்.முருகன் பங்கேற்பு!

    ஸ்டெர்லைட் நிறுவனத்தில் தமிழக அரசே மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில், அது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக, முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில், திமுக தூத்துக்குடி எம்.பி கனிமொழி, பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    10:23 (IST) 26 Apr 2021
    அமெரிக்காவிலிருந்து இந்தியா வரும் 318 ஆக்சிஜன் செறிவூட்டிகள்!

    இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவிற்கு உதவ அமெரிக்கா முனைப்புடன் இருப்பதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். இந்த நிலையில், ஏர் இந்தியா விமானம் மூலம், 318 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமெரிக்கா இந்தியாவிற்கு அனுப்புவதற்காக விமானத்தில் ஏற்றி வருகிறது.

    10:15 (IST) 26 Apr 2021
    தமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்!

    தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மேலும், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளும் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுகிறது. ஜிம்கள், மதுபான பார்கள், கேளிக்கை அரங்கங்கள், பெரிய அரங்குகள், வணிக வளாகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    10:12 (IST) 26 Apr 2021
    முழு ஊரடங்கு எதிரொலி; சென்னையில் 572 வாகனங்கள் பறிமுதல்!

    சனிக்கிழமை இரவு 10 மணி தொடங்கி, இன்று காலை 4 மணி வரை முழு ஊரடங்கு சுமார் 30 மணி நேரங்களுக்கு அமலில் இருந்தது. தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிவோர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னையில் தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, 572 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    10:08 (IST) 26 Apr 2021
    இந்தியாவில் 3000-ஐ நெருங்கிய கொரோனா பலி

    இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 3,52,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2,812 பேர் உயிரிழந்துள்ளனர்.

    10:06 (IST) 26 Apr 2021
    முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

    ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக முக்கிய முடிவுகளை எட்டுவதற்காக, முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

    Web Title: Today tamil news live sterlite oxygen all party meeting cm duraimurugan sunday lockdown corona election