scorecardresearch
Live

Today Tamil News : மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக வேட்பாளர்கள் கூட்டம்

தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஊரடங்கு நீட்டிப்பு, கட்டுப்பாடுகள் தொடர்பாகவும், மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளார்.

Today Tamil News : மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக வேட்பாளர்கள் கூட்டம்

Today Tamil News : தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

தலைமை செயலாளர் இன்று முக்கிய ஆலோசனை :

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிக கொரோனா பரவல் உள்ள சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஊரடங்கு நீட்டிப்பு, கட்டுப்பாடுகள் தொடர்பாகவும், மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை நடைபெற உள்ளது.

500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் :

பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பி.எம்.கேர்ஸ் நிதி மூலம், நாடு முழுவதும் 500 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க பிரதமர் ஒப்புதல் வழங்கி உள்ளார். மேலும், 1 லட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்கவும் பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா :

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் 16,665 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் இருந்த 98 பேர் உயிரிழந்துள்ளனர். இத்னிடையே, தமிழக முதல்வர் அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்திற்காக, 1.50 கோடி தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆளுநர் வலியுறுத்தல் :

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தி உள்ளார். மேலும், மருத்துவமனைகளில், கொரோனா பரிசோதனை, படுக்கை வசதி ஆகியவற்றை அதிகரிக்கவும் மாநில அரசுக்கு ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார்.

கோவின் தடுப்பூசி முன்பதிவு :

கொரோனா தடுப்பூசிகள் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு இலவசமாக செலுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அதற்கான முன்பதிவு கோவின் ஆன்லைன் போர்ட்டலில் நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 12 மணி நேரங்களுக்கு உள்ளாகவே, 1.23 கோடி பேர் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
22:10 (IST) 29 Apr 2021
சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை ரூ.20,000க்கு விற்பனை செய்த மருத்துவர் கைது

சென்னை தாம்பரத்தில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் ரூ.20,000க்கு விற்பனை செய்த இம்ரான்கான் என்ற மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடந்தையாக இருந்தவர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

22:07 (IST) 29 Apr 2021
மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்ரல் 30ம் தேதி மாலை திமுக வேட்பாளர்கள் கூட்டம்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் – கழக வேட்பாளர்கள் கூட்டம் நாளை (ஏப்ரல் 30) மாலை 5 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

18:47 (IST) 29 Apr 2021
சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னையில் 6 நபர்களுக்கு மேல் தொற்று பாதிக்கப்பட்டோர் உள்ள தெருக்களின் எண்ணிக்கை 993 ஆக உயர்ந்துள்ளது. அதே போல, 10 நபர்களுக்கு மேல் தொற்று பாதிக்கப்பட்டோர் உள்ள தெருக்களின் எண்ணிக்கை 375 ஆக உயர்ந்துள்ளது.

18:06 (IST) 29 Apr 2021
மாநில அரசுகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி விலை ரூ.400 ஆக குறைப்பு

மாநில அரசுகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி விலையை குறைத்து ரூ.400 வழங்குவதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக மாநில அரசுகளுக்கு ரூ.600 என விலை நிர்ணயம் செய்திருந்தது.

17:27 (IST) 29 Apr 2021
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி நாளை ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முக்கிய அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். ஆக்ஸிஜன், மருந்துகள் தடையின்றி கிடைப்பது தொடர்பாக ஆலோசனை எனத் தகவல்.

17:14 (IST) 29 Apr 2021
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.5 கோடி நிதிஉதவி

இந்தியாவில் கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.5 கோடி நிதிஉதவி அளித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அறக்கட்டளை மற்றும் பிரிட்டிஷ் ஏசியன் இந்தியா இணைந்து இந்த நிதியுதவியை அளித்துள்ளன.

16:41 (IST) 29 Apr 2021
நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு

நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலோர பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். கூடங்குளம், பெருமணல், காவல்கிணறு, பணகுடி, வள்ளியூர் சுற்றுவட்டாரத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தகவல் அளித்துள்ளனர்.

16:14 (IST) 29 Apr 2021
கொரோனா பரவத் தொடங்கி 14 மாதங்களுக்குப் பின் துரிதமாக செயல்படுவதா? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

கொரோனா பரவத் தொடங்கி 14 மாதங்களுக்குப் பின் துரிதமாக செயல்படுவதாக கூறுவதா என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி கொரோனாவைத் தடுக்க விரைவாக நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

16:11 (IST) 29 Apr 2021
கொரோனா பரவத் தொடங்கி 14 மாதங்களுக்குப் பின் துரிதமாக செயல்படுவதா? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

கொரோனா பரவத் தொடங்கி 14 மாதங்களுக்குப் பின் துரிதமாக செயல்படுவதாக சொல்வதா என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும்,

கொரோனாவை தடுக்க நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறித்தியுள்ளது.

15:37 (IST) 29 Apr 2021
சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறார் மன்மோகன் சிங்

கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று குணமடைந்து வீடு திரும்புகிறார்.

14:08 (IST) 29 Apr 2021
ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

•மே 2 வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழுஊரடங்கு இருந்தாலும் வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்டோருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

•இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.

• தமிழகத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள அனுமதி.

14:06 (IST) 29 Apr 2021
வெப்பநிலை 98.6 F மேல் இருந்தால் அனுமதியில்லை

கொரோனா நெகட்டிவ் என்றாலும் தேர்தல் முகவர்கள் உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

13:16 (IST) 29 Apr 2021
டெல்லியில் கொரோனா தடுப்பூசி இல்லை

டெல்லியில் தற்போது தடுப்பூசிகள் இல்லை என்றும் தடுப்பூசி நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். டெல்லியில் கடந்க்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்துள்ளது என்றும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

13:05 (IST) 29 Apr 2021
நடிகர் சித்தார்த்துக்கு கொலை மிரட்டல்

தமிழக பாஜக ஐ.டி. செல் தன்னுடைய செல்போன் எண்ணை லீக் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் சித்தார்த். யார் பொய் சொன்னாலும் அறை கிடைக்கும் என்று சமீபத்தில் ட்வீட் செய்த அவரை மிரட்டும் வகையில் 500க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக ட்வீட் வெளியிட்டுள்ளார்.

My phone number was leaked by members of TN BJP and @BJPtnITcell Over 500 calls of abuse, rape and death threats to me & family for over 24 hrs. All numbers recorded (with BJP links and DPs) and handing over to Police.I will not shut up. Keep trying.@narendramodi @AmitShah— Siddharth (@Actor_Siddharth) April 29, 2021
13:00 (IST) 29 Apr 2021
மே 1 மற்றும் 2 தேதிகளில் ஊரடங்கா?

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மே 1,2 தேதிகளில் முழுஊரடங்கு விதிப்பது குறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்கும் என்று தமிழக தலைமை அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.

12:50 (IST) 29 Apr 2021
நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன்

கொரோனா தடுப்பூசி குறித்த அவதூறு பரப்பியதாக அவர் மீது வழக்கு போடப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பூசி வாங்க 2 லட்சம் ரூபாயை தமிழக சுகாதாரத்துறைக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

12:29 (IST) 29 Apr 2021
பெங்களூரில் கொரோனா நோயாளிகள் தலைமறைவு

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3000 கொரோனா நோயாளிகளை காணவில்லை. தடம் அறிய முற்பட்ட போது அவர்களின் செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

11:55 (IST) 29 Apr 2021
திருச்சி பெல் நிறுவனத்தில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை – விஜயகாந்த்

திருச்சி பெல் நிறுவனத்தில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய – மாநில அரசுகளுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே மதிமுக பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்திய நிலையில் பலரும் பெல் நிறுவனத்தின் ஆக்ஸிஜன் எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

11:55 (IST) 29 Apr 2021
தடுப்பூசி போட முன்வாருங்கள் – ஆணையர் பிரகாஷ்

சி.ஐ.டி. நகரில் களப்பணி மேற்கொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் தடுப்பூசி போட முன்வாருங்கள் என்று கூறினார். மேலும் இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பனது என்றும் தெரிவித்தார்.

11:31 (IST) 29 Apr 2021
ஆலோசனை கூட்டத்தில் கலந்துக் கொண்டோர் யார் யார்?

தலைமைச் செயலாளர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

11:27 (IST) 29 Apr 2021
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

11:18 (IST) 29 Apr 2021
6 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள 6 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார். காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, திருப்பூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

11:10 (IST) 29 Apr 2021
ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா உறுதி!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

10:47 (IST) 29 Apr 2021
தமிழகத்திற்கு மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள்!

3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் தமிழகம் வந்தடைந்துள்ளது. தமிழகத்திற்கு 67,85,720 தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

10:06 (IST) 29 Apr 2021
இந்தியாவில் 15 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 15 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

10:05 (IST) 29 Apr 2021
இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,645 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 3,645 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கையானது 2,04,832 ஆக அதிகரித்துள்ளது.

09:57 (IST) 29 Apr 2021
தமிழ் அறிஞர் பி.எஸ்.மணி மரணம்!

தமிழ் அறிஞரும் வரலாற்று ஆசிரியருமான பி.எஸ் மணி நேற்று புதுடெல்லியில் காலமானார். அவருக்கு வயது 87. சுதந்திரப் போராட்டம் குறித்த இலக்கியப் படைப்புகளுக்கு பெயர் பெற்றவர் பி.எஸ்.மணி என்பது குறிப்பிடத்தக்கது.

09:54 (IST) 29 Apr 2021
நிதியமைச்சரின் செலவினச் செயலாளராக டி.வி.சோமநாதன் நியமனம்!

நிதியமைச்சரின் செலவினச் செயலாளாராக தமிழக ஐஏஎஸ் அதிகாரி டி.வி. சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நிதித்துறையில் பரந்த அனுபவமும், பிரதமர் அலுவலக இணை செயலாளராகவும் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

09:21 (IST) 29 Apr 2021
ரெம்டெசிவிர் மருந்து விற்பனை; கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு படையெடுத்த பிற மாவட்ட மக்கள்!

கொரோனா சிகிச்சைச்கு பயன்படும் ரெம்டிசிவிர் மருந்தை வாங்வதற்காக 4-வது நாளாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிகாலை 4 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

09:12 (IST) 29 Apr 2021
காங்கிரஸ் வேட்பாளர் மாரடைப்பால் மரணம்!

கேரளாவில் மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நிலாம்பூர் தொகுதி வேட்பாளருமான வி.வி.பிரகாஷ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

09:09 (IST) 29 Apr 2021
நிபுணத்துவ உறுப்பினர் பதவியில் விருப்பமில்லை; கிரிஜா வைத்தியநாதன்

பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு தொடுத்திருந்தது. இந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக இருக்க தனக்கு விருப்பம் இல்லை என்று  கிரிஜா வைத்தியநாதன், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கே. சத்யாகோபாலை நியமித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

09:06 (IST) 29 Apr 2021
லஞ்சம் கேட்டால் நடவடிக்கை; சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

கொரோனாவால் இறந்தவர்களின் உடலை உறவினர்கள் பெறுவதற்கோ அல்லது இறுதி சடங்கிற்காகவோ லஞ்சம் கேட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

09:03 (IST) 29 Apr 2021
அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

கொரோனா தொற்றுப் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், செமஸ்டர் தேர்வுகள், மறுதேர்வு, சிறப்பு அரியர் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

09:01 (IST) 29 Apr 2021
3000 கொரோனா நோயாளிகளை காணவில்லை; பெங்களூர் ஷாக்!

பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,000 பேர் காணாமல் போயியுள்ளதாக, கர்நாடகா வருவாய் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

08:59 (IST) 29 Apr 2021
டெல்லி வந்தடைந்த ரஷ்ய உதவிப் பொருள்கள்!

20 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 75 வெண்டிலேட்டர்கள், 22 மெட்ரிக் டன் மருந்துப் பொருள்களுடன் ரஷ்ய விமானம் டெல்லி வந்தடைந்துள்ளது.

08:55 (IST) 29 Apr 2021
ஜூன் 4 முதல் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி!

பிசிசிஐ மற்றும் தமிழக அரசு அனுமதியுடன் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 4-ம் தேதி முதல் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

08:52 (IST) 29 Apr 2021
இந்தியாவுக்கு உதவும் ஜெர்மன்!

இந்தியா கொரோனா தடுப்பூசி மருந்துகளை உலக நாடுகளுக்கும், எங்களுக்கும் வழங்கி உதவியுள்ளது. இதனால், இந்தியாவின் இக்கட்டான சூழலில் அவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது.

08:51 (IST) 29 Apr 2021
உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் மூடல்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து அரசு அலுவலகங்களையும் மூடுவதாக அம்மாநில அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

08:50 (IST) 29 Apr 2021
மே.வங்கத்தில் இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு!

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான எட்டாம் மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது. 13 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் ரெட் அலர்ட் அறிவித்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

08:40 (IST) 29 Apr 2021
சென்னையில் சுனாமி போல கொரோனா!

சென்னையில் சுனாமி போன்று கொரோனா பரவி வருவதாக தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Web Title: Today tamil news live tn chief seceretary meets six district collectors sunday lockdown corona election vote counting cm ops stalin dmk admk

Best of Express