chennai weather today : இந்தியாவில் தென் மேற்கு பருவ மழை ஜூன் மாதத்திலும், வட கிழக்கு பருவ மழை அக்டோபர் மாதத்திலும் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழை வழக்கமான நாளில் தொடங்கியது. ஆனாலும், ஜூன், ஜூலை ஆகிய 2 மாதங்களில் பெய்த மழை அளவு சராசரியை விட 9 சதவீதம் குறைவாக உள்ளது.
தென்மேற்கு பருவ மழை காலம் 50 சதவீதம் முடிந்து விட்டது. ஆகஸ்ட் (இந்த மாதம்), செப்டம்பர் என 2 மாத காலங்கள் உள்ளன. இந்த 2 மாதத்திலும் ஓரளவு நன்றாக மழை பெய்யும் என்று வானிலை இலாகா கூறியுள்ளது.
மேலும் வடக்கு வங்காள விரிகுடா பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால் அடுத்த 2 வாரத்துக்கு மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இதுவரை பெய்துள்ள மழையின்படி சிக்கிம் மாநிலத்தில் மட்டும் சராசரியை விட அதிகமாக மழை பெய்துள்ளது.தமிழ்நாடு, குஜராத், கேரளா, ஒடிசா, மேற்கு வங்காளம், இமாச்சல பிரதேசம் டெல்லி, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் சராசரியை விட குறைவாக மழை பெய்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மழை சரியாக பெய்யவில்லை. அங்கு 60 சதவீதம் வரை மழை குறைவாக பெய்துள்ளது.
சென்னை வானிலை மையம்:
சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.