மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில், வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் பலர் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார். டோக்கன் வழங்கி நியாய விலைக் கடைகள் மூலம் பணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று (டிச.14) முதல் நிவாரண நிதிக்கான டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. நியாய விலைக் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 4 மாவட்டங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களுக்கும்; செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும் ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
ரூ.6000 நிவாரண நிதி வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் (டிச.17) ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், ரூ.6000 புயல் நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
நிவாரணத் தொகை விநியோகத்திற்கு ஒவ்வொரு நியாய விலைக் கடையிலும் 4 பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். வரும் ஞாயிற்று கிழமை முதல் நிவாரண தொகை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்று கிழமை தொடங்கி 7 நாட்களுக்குள் நிவாரண தொகையை வழங்க வேண்டும், டோக்கன்களை ரேஷன் ஊழியர்கள் தான் நேரில் சென்று வழங்க வேண்டும், மூன்றாம் நபரை பணியில் ஈடுபடுத்த கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“