தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது.
நாடெங்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் வருகின்றன. இதில் தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச் சாவடிகள் உள்ளன. ஆண்டுதோறும் இந்த சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.
நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் மாற்றி அமைக்கப்பட வேண்டிய சுங்கக்கட்டணம் நாடாளுமன்ற தேர்தலால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
தேர்தல் முடிந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஜூன் மாதம் சுங்கக்கட்டணத்தை உயர்த்தியது. கடந்த ஜூனில் தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு 5% வரை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. இதனால் இந்த சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டியது வரும் எனச் சொல்லப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“