தமிழகத்தில் சந்தைகளுக்கு காய்கறி வரத்து குறைவால், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கனிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை விண்ணைத் தொட்டிருக்கிறது. சில இடங்களில் தக்காளி கிலோ ரூ.100-ஐ தாண்டியதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் - மே மாதங்களில் நிலவிய கடும் வறட்சி மற்றும் வெப்பம் நிலவியதாலும், ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாலும், காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் காய்கறி சந்தைகளுக்கு காய்கறி வரத்து கனிசமாகக் குறைந்துள்ளது. குறிப்பாகத் தக்காளி விலை தமிழகத்தில் எல்லா இடங்களிலும் அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில், சில்லறை விற்பனையில் தக்காளில் சில இடங்களில் ரூ.100-க்கும் சில இடங்களில் ரூ. 100-ஐ தாண்டியும் விற்கப்படுகிறது.
தக்காளி சென்னையில் விற்பனை செய்யப்படும் விலையைவிட தேனி மாவட்டம் போடி பகுதியில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 110-க்கு விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் அனைவரின் வீடுகளிலும் பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை திடீரென உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் தங்கள் குடும்பத்திற்கான சமையல் செலவு கூடியிருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தக்காளி விலை எப்போதும் பொதுமக்களாலும் ஊடகங்களாலும் விவாதிக்கப்படுகிற ஒன்றாகவே இருந்து வருகிறது. தக்காளி விலை ஒன்று விண்ணைத் தொட்டு மிரள வைக்கும், இல்லை அதள பாதாளத்திற்கு சென்று விவசாயிகளை வருத்தப்பட வைக்கும். இந்த முறை விண்ணைத் தொட்டு அனைவரையும் அவதிப்பட வைத்துள்ளது. தென்மேற்கு பருவ மழையால் தக்காளி செடியில் பூக்கள் உதிர்ந்ததால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தக்காளி விளைச்சல் குறைந்ததால், தக்காளி வரத்து குறைந்து தக்காளி விலை அதிகரித்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பெரும்பாலும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தான் தக்காளி வருகிறது. ஆந்திரா, கர்நாடகாவில மழை பெய்து வருவதால், சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இது தக்காளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
அதே போல, வெங்காயம் விலையும் கனிசமாக உயர்ந்துளது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.40ஐ தாண்டி விற்பனையாகிறது, சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.80 தொட்டுள்ளது.
கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக பீன்ஸ் கிலோ ரூ. 100-க்கும் மேல் விற்பனையான நிலையில், வரத்து அதிகரித்துள்ளதால் பீன்ஸ் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் வழக்கமாக 7,500 டன் வரை காய்கறிகள் விற்பனைக்கு வரும். ஆனால், காய்கறி விளைச்சல் பாதிப்பு காரணமாக இப்போது சுமார் 6,000 டன் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது காய்கறி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், காய்கறி வரத்து மீண்டும் வழக்கமான அளவு வரும் வரை இந்த விலை உயர்வு தொடரும் என்று வியாபாரிகள் தெரிவிகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“