மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை (09.12.2023) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த 4 மாவட்டங்களில் சனிக்கிழமை தனியார் பள்ளிகளைத் திறக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 3, 4-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தவர்களை மீட்பு படையினர் படகுகளில் சென்று பாதுகாப்பாக வெளியேற்றினர். தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதுகாப்பாக மீட்கபட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில், மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளநீர், பள்ளிகளின் வளாகங்களில் தேங்கியதால் சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி வளாகங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றுப் பணிகள் நடைபெற்றன. பள்ளி வளாகங்களில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்றன.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வரும் திங்கள்கிழமை (11.12.2023) பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி வளாகங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளை ஆய்வு செய்ய கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி வளாகங்களில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிக்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
மிக்ஜாம் புயல், மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (09.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, இந்த 4 மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகளையும் திறக்ககூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பு காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தாலும் சனிக்கிழமைகளில் சில தனியார்கள் பள்ளிகள் திறந்து செயல்பட்டு வருவதால், சென்னை, திருள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (09.12.2023) தனியார் பள்ளிகளையும் திறக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.