நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் திமுக எம்.பி., டி.ஆர். பாலு தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, நீட் விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் கல்வித் துறை அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக அமித்ஷா உறுதி அளித்ததாக தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு கூறியதாவது: “நீட் தேர்வு விலக்கு உடனடியாக செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. நீட் விலக்கு முன்னாலேயே தமிழகத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 03.03.2007 அன்று குடியரசுத் தலைவர் இதைப் போன்ற ஒரு ஒப்புதலைக் கொடுத்திருக்கிறார். இதே போல, நீங்கள் நீட் விலக்கு அளிக்கலாம் என்ற கருத்துரையை வழங்கி இருக்கிறோம். இந்த பிரச்சனை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், மத்திய கல்வித் துறை அமைச்சர் ஆகியோருடன் கலந்து பேசி, இதற்கு உடனடியாக ஒரு முடிவு கண்டு என்ன முடிவெடுக்கப்படுவது குறித்து தமிழக முதலமைச்சரிடம் தெரிவிப்பேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் சொல்லியிருக்கிறார். ஜனவரி 31ம் தேதிக்குள் நம்முடைய தமிழகத்திற்கு வேண்டிய நிதியை அனுப்பி வைப்பேன் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி கூறியிருக்கிறார்கள்” என்று கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனான சந்திப்பில், திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன், விசிக எம்.பி. ரவிக்குமார், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் இருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித் ஷா அவர்களை அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் மேனாள் அமைச்சர் திரு டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் டெல்லியில் இன்று மாலை 4.30 மணிக்கு சந்தித்தோம். நீட் தேர்வில் விலக்கு அளிக்கவேண்டும், பேரிடர் மேலாண்மை நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் வாகனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் விஷயத்தையும் அவரது கவனத்துக்குக் கொண்டுசென்றோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"