பாஜகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? – டி.ஆர்.பாலு கேள்வி

“மற்ற கட்சியினரை கைது செய்தால் மாலையே விட்டுவிடுகின்றனர். ஆனால், உதயநிதியை மட்டும் நீண்ட நேரம் காக்க வைத்துள்ளனர். பாஜகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?” என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுளார்.

tr baalu, tr baalu question asked to aiadmk, tr baalu question to amit shah, dmk mp tr baalu, டிஆர் பாலு, அதிமுகவுக்கு டிஆர் பாலு கேள்வி, டிஆர் பாலு அமித்ஷாவுக்கு கேள்வி, udhayanidhi arrest, tr baalu press meet

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் தேர்தல் பிரசாரப் பயணத்தை தொடங்கிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கைது செய்யப்பட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், “மற்ற கட்சியினரை கைது செய்தால் மாலையே விட்டுவிடுகின்றனர். ஆனால், உதயநிதியை மட்டும் நீண்ட நேரம் காக்க வைத்துள்ளனர். பாஜகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? கைது, சிறை, சித்ரவதை என அனைத்தையும் பார்த்தவர்கள்தான் திமுகவினர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் மிசா சிறையில் ஓராண்டு காலம் இருந்தது மட்டுமில்லாமல் அடி, உதைபட்டு, ரத்தம் சொட்ட சிறையில் இருந்தவர். கருணாநிதி, மாறன் படாத கொடுமைகள் இல்லை. எல்லோரும் சிறைவாசம் கண்டவர்கள்தான். அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த உதயநிதி எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாராகத்தான் இருக்கிறார். ஆனால், இத்தகைய கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு இருக்க நாங்கள் விரும்பவில்லை. இந்த கொடுமைகளை தட்டிக்கேட்க வேண்டும். அராஜக ஆட்சி நடக்கிறது. பாஜக முறைப்படி சட்டம் ஒழுங்கை காப்பாற்றி இருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டினோம். அமித்ஷா வரும்போதும் போகும்போதும் இடைவெளி சரியாக இருந்ததா? பழனிசாமி போகும் இடத்திலெல்லாம் இருந்த கூட்டத்தில் இடைவெளி இருந்ததா? சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான். அந்த சட்டத்தை எங்களுக்கு வழங்க தயாராக இல்லை.” என்று கூறினார்.

நேற்று (நவம்பர் 21) சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் ரூ.67,359 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் விரைவில் குடும்ப அரசியல் ஒழிக்கப்படும். 2ஜி ஊழல் புகார்களைக் கொண்ட திமுக ஊழல் பற்றி பேசலாமா? ஊழல் புகார்களைக் கூறுவதற்கு முன்பு திமுக தங்கள் குடும்பத்தினர் மீதுள்ள ஊழல் புகார்களைப் பார்க்க வேண்டும். ஊழல் பற்றி பேச அருகதை இல்லை. 10 ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்துக்கு செய்தது என்ன? மன்மோகன் சிங் அரசு 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதியைவிட பிரதமர் மோடியின் அரசு இரு மடங்கு நிதி ஒதுக்கியுள்ளது. பாஜக தமிழகத்துக்கு செய்தவைகளை நான் பட்டியல் தரத் தயார். திமுக தமிழகத்துக்கு என்ன செய்தது என்று பட்டியல் தரத் தயாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

அமித்ஷாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு திமுகவின் சாதனைகளை பட்டியலிட்டுள்ளார். அதே நேரத்தில், “இந்தி திணிப்பு, தமிழகத்தின் வருவாய்ப் பறிப்பு தவிர, 6 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன?” என்று அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது, “மத்திய அரசில் இருந்தபோது தி.மு.க தமிழகத்திற்குக் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? என்று நேற்றைய தினம் அதிமுகவின் கூட்டணி அறிவிப்பைக் கேட்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டிருக்கிறார். அந்த சாதனைப் பட்டியலைச் சொல்ல வேண்டுமென்றால், நேருக்கு நேர் மேடை அமைத்து, அமித்ஷா கூறியிருப்பது போல் தெருதோறும் கூட்டம் போட்டுப் பேச திமுகவால் முடியும்.

ஆனாலும், அந்தக் காலக்கட்டத்தில் குஜராத்தில் அமைச்சராக இருந்த அமித்ஷாவுக்கு திமுகவின் சாதனைகள் தெரியாது என்பதால் அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சமூகநீதியின் பிறப்பிடமாம் தமிழகத்தில் இருந்து சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கை ஆதரித்த போது ‘பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றியிருக்கிறோம்.

தமிழகத்தின் நீர் உரிமையை நிலைநாட்ட காவிரி நடுவர் மன்றம் அமைத்திருக்கிறோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய்யிடம் ‘காமராஜருக்கு நினைவு மண்டபம், ‘காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம்’ ஆகியவற்றை அமைத்து, ‘சேலம் உருக்காலை தனியார்மயமாவதை’ தடுத்து நிறுத்தியிருக்கிறோம்’.

பிரதமர் மன்மோகன்சிங்கை ஆதரித்த போது, ‘சிறுபான்மையினர் மீது அடக்குமுறை காட்டும் பொடா சட்டத்தை ரத்து செய்திருக்கிறோம். சென்வாட் வரி ரத்து செய்திருக்கிறோம்.

காவிரி இறுதித் தீர்ப்பை பெற்றது, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது, காமராஜர் – எண்ணூர் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைத்தது, 4,676 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் 3,276 கி.மீ. நெடுஞ்சாலைகள் ரூ.56 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலைகளாகவும், மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள் மேற்கொண்டது, சென்னை அருகில் உள்ள ஒரகடத்தில் ரூ.470 கோடி மதிப்பீட்டில் தேசிய ஆட்டோமொபைல் (R and D) நிறுவனமும், இதர உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தியது. ரூ.1,553 கோடி மதிப்பீட்டில் சேலம் ரோலிங் மில் சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தியது போன்ற பல பணிகளைச் செய்திருக்கிறோம்.

தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் நிறுவியது, சேலத்திற்கென தனி ரயில்வே கோட்டம் ஏற்படுத்தியது, ரூ.120 கோடி மதிப்பீட்டில் சேலத்தில் உள்ள மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத் தரம் உயர்த்தியது, ரூ.1,650 கோடி மதிப்பீட்டில் சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடங்கியது, ஏன், பாஜக முடக்கி வைத்துள்ள ரூ.2,427 கோடி மதிப்பீட்டில் சேதுசமுத்திரத் திட்டம் துவங்கியது எல்லாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுக பங்கேற்ற நேரத்தில்தான் என்பதை உள்துறை அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இவை தவிர சென்னை மாநகர மக்களின் தாகத்தைத் தீர்த்து வைக்கும் ரூ.908 கோடி மதிப்பீட்டில் நெம்மேலியில் கடல் நீரைச் சுத்திகரிக்கும் திட்டம், ரூ.640 கோடி மதிப்பீட்டில் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களை இணைக்கும் சாலைகளை அகலப்படுத்தும் திட்டம், அனைத்து மீட்டர் கேஜ் ரயில் பாதைகளையும் பிராட் கேஜ் ரயில் பாதைகளாக மாற்ற ஒப்புதல், ரூ.1,828 கோடி மதிப்பீட்டில் 90 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைத்தல் போன்றவற்றைச் சாதித்ததோடு மட்டுமின்றி, நேற்று அடிக்கல் நாட்டினாரே மெட்ரோ ரயில் திட்டம், இப்படியொரு திட்டத்தை முதன்முதலில் சென்னைக்குக் கொண்டு வந்து, ரூபாய் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்து, முக்கால்வாசிப் பணிகளை முடித்து வைத்தது தமிழ்நாட்டில் ஆட்சியிலும், மத்திய அரசில் பங்கேற்றும் இருந்த போது திமுக செய்த சாதனைகள்தான்.

தமிழ்நாட்டில் ரூபாய் 1,928 கோடி மதிப்பில் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றி, சர்வதேசத்தரத்தில் தேசிய கடல்சார் பல்கலைக்கழகம் அமைத்து, திருவாரூரில் தேசிய பல்கலைக்கழகத்தை உருவாக்கி, திருச்சியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் தோற்றுவித்து, ஆசியாவிலேயே முதல்முறையாகச் சென்னையில் ‘நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் எம்பவரிங் பர்சன்ஸ் வித் மல்டிப்பிள் டிஸ்எபிலிட்டீஸ்’ என்ற நிறுவனத்தை உருவாக்கி, உள்துறையின் கீழ் வரும் மத்திய அதிரடிப்படை (National Security Guard) மையம் ஒன்றைத் தமிழகத்தில் சாதித்துக் காட்டியது திமுக மத்திய ஆட்சியில் பங்கேற்று இருந்த நேரத்தில்தான் என்பதை உள்துறை அமைச்சர், பழைய விவரங்கள் தெரிந்தவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.

மூன்று வேளாண் திட்டங்களைக் கொண்டு வந்து நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்டக் களத்தை உருவாக்கியது மத்திய பாஜக அரசும், அதிமுக அரசும்.

விவசாயிகளின் கடன்களையே தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறி வருகிறது பா.ஜ.க அரசு. ஆனால், ரூ.72 ஆயிரம் கோடி விவசாயக் கடன் மற்றும் வட்டி தள்ளுபடி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தள்ளுபடி செய்யப்பட்டது தி.மு.க பங்கேற்றிருந்த போதுதான்.

சமூகநீதி என்றாலே பா.ஜ.கவுக்கு கசக்கிறது. அந்த நிலையின்றி, மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு 27 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்தது தி.மு.க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பங்கேற்று இருந்த காலத்தில்தான் என்பதை உள்துறை அமைச்சர் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால், மத்திய பாஜக அரசு – அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டுக்குச் செய்தது என்ன?
சமூகநீதியை அழித்தது; இட ஒதுக்கீட்டை பாழ்படுத்தும் வகையில் செயல்படுவது; நீட் தேர்வு மசோதாவை நிராகரித்தது; ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்து காவிரி டெல்டாவை பாலைவனமாக்கியது; தமிழ் சொம்மொழி நிறுவனத்தை முடக்கியது; ஸ்டெர்லைட் ஆலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது; உதய் திட்டம், புதிய மின்சாரத் திருத்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் இலவச மின்சாரத்தைப் பறிக்க முயற்சி; பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் தமிழகத்தில் உள்ள தொழில் நகரங்களை எல்லாம் வீழ்த்தியது; எந்தப் பேரிடருக்கும் நிதி கொடுக்காதது, மாநிலச் சட்டப்பேரவையின் உணர்வுகளை மதிக்காமல் எதேச்சதிகாரமாகச் செயல்படுவது, ஏன், ராஜீவ் வழக்கில் 30 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்க அனுப்பிய தமிழக அரசின் தீர்மானத்திற்கு இதுவரை ஒப்புதல் கொடுக்க மறுப்பது, என்று மத்திய பா.ஜ.க அரசு தமிழகத்திற்கு இழைத்துள்ள அடுக்கடுக்கான துரோகங்களைப் பட்டியலிட முடியும். அதற்குத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் காத்திருக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டுக்கு நிதியை வாரி வழங்கி விட்டதாகக் கூறியிருக்கிறார் உள்துறை அமைச்சர். நான் அவரிடம் ஒரேயொரு கேள்வி கேட்க விரும்புகிறேன். 15-வது நிதி ஆணையத்தில் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தீர்த்து வைத்து விட்டீர்களா?
கொரோனாவுக்கு உயிர் காக்கும் மருத்துவக் கருவிகள் வாங்க அ.தி.மு.க அரசு கேட்ட நிதியைக் கொடுத்து விட்டீர்களா? ஜி.எஸ்.டி மூலம் இதுவரை தமிழகத்தில் கிடைத்த நிதி எவ்வளவு? அதில் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செலவிட்டது எத்தனை கோடி? வட மாநிலங்களுக்கு வாரிக் கொடுத்தது எவ்வளவு கோடி? தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வருவாயையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டு, ஏதோ ‘பட்டாணி’ கொடுப்பது போல் சில உதவிகளைச் செய்து விட்டு உள்துறை அமைச்சராக இருப்பவரே இப்படிப் பேசுவது மிகுந்த வேதனைக்குரியது. உண்மை என்னவென்றால் இன்றைக்குத் தமிழ்நாடுதான் மத்திய அரசுக்கும் வட மாநிலங்களுக்கும் நிதி கொடுத்து வருகிறது.

ஆனால், மத்திய பா.ஜ.க அரசு, தமிழ் மொழியைப் புறக்கணித்தது, இந்தித் திணிப்பு, மத துவேஷம் உருவாக்குவது, சமூக நல்லிணக்கத்தை பாழ்படுத்துவது போன்ற துரோகங்களை மட்டுமே இதுவரை தமிழ்நாட்டுக்குச் செய்து வருகிறது. இவை தவிர தமிழகத்திற்கு நீங்கள் செய்த சாதனை என்ன உள்துறை அமைச்சர் அமித்ஷா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tr baalu question rise on aiadmk and home minister amit shah

Next Story
‘வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்’ முறையை கைவிடுக: மு.க ஸ்டாலின் கோரிக்கைdmk, mk stalin conduct grama sabha meeting, mk stalin grama sabha meeting in violation of ban, கிராம சபைக் கூட்டம், திமுக தலைவர் முக ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு, police fir registered on mk stalin, தடையை மீறி கிராம சபை கூட்டம், thiruvallur, korattur, grama sabha meeting, gandhi jayanthi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com