ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு வழி வகுத்த் அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்து, அவர் மீண்டும் எம்.பி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், “ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆவார், உச்ச நீதிமன்றத்தை விட பெரிய கொம்பன் யாரும் இல்லை” என்று தி.மு.க மக்களவை குழுத் தலைவர் டி.அர்.பாலு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
தாம்பரத்தில் தி.மு.க மக்களவை குழுத் தலைவர் டி.அர்.பாலு ஊடகங்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மிகச் சிறப்பாக தமிழகம் முழுவதும் நடக்கிறது. அதில் தாம்பரம் மிக வேகமாக பதிவாகி வருகிறது. முதல் கட்டத்தில் 76 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவாகி இருக்கிறது. அடுத்து 55 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவாகி இருக்கிறது. இன்று 10-15 ஆயிரம் விண்ணங்கள் பதிவாகு என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரம் அட்டைகள் இருக்கிறது. அதில் தகுதி உள்ளவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். செப்டம்பர் 15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டம் மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட உள்ளது.” என்று கூறினார்.
ராகுல் காந்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.ஆர். பாலு, “அவர் மீண்டும் எம்.பி.யாக வந்துதான் ஆக வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நாட்டின் சட்டம். அது இந்தியாவினுடைய சட்டம். சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல யாரும், எந்த கொம்பனும் இருக்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவு கொடுத்தாகிவிட்டது. அங்கிருந்து உத்தரவு வாங்கி வந்து சபாநயகரிடம் கொடுத்தாகிவிட்டது. சபாநாயகர், குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்ட உடன் 24 மணி நேரத்துக்குள் உடனடியாக தகுதி நீக்கம் செய்தார். அதே மாதிரி, அவரை மீண்டும் எம்.பி.யாக தொடரச் செய்யும்போது வேகமாக செய்ய வேண்டும் இல்லையா? சபாநாயகர் செய்வார். செய்யாமல் இருக்க மாட்டார் என்று நான் நினைக்கவில்லை. எப்படியிருந்தாலும் அவர் செய்துவிடுவார்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"