திமுக எம்பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி, திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த பட்டியலில் தி.மு.க-வின் பொருளாளர் டி.ஆர்.பாலுவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் டி.ஆர்.பாலு அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தில் மே 12-ம் தேதி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த அவதூறு வழக்கு தொடர்பாக இன்று அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அவரிடம் வழக்கின் நகல் வழங்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெறும் என்றும் அப்போது மீண்டும் ஆஜராகுமாறும் அண்ணாமலைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், நீதிமன்ற வாசலில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “ஊழலுக்கு எதிரான பா.ஜ.க-வின் போராட்டம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. அந்த போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும்.
டி.ஆர்.பாலு மீது நாங்கள் முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் 2014-ம் ஆண்டு கலைஞரின் மகன் அழகிரி மதுரையில் தெரிவித்திருக்கிறார். அவர்மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. டி.ஆர்.பாலு மட்டுமல்ல, அவரது குடும்ப உறுப்பினர்களும் சொத்து குவித்திருக்கிறார்கள்.
அதனால் அவரின் குடும்பத்தினர் அனைவரும் நீதிமன்றம் வர வேண்டும் என சம்மன் அனுப்ப முடிவுசெய்திருக்கிறோம்.
DMK Files பாகம் இரண்டு தயாராக இருக்கிறது. அதில், பினாமிகளைக் குறிப்பிட்டிருக்கிறோம். நான் வெளியிட இருக்கிற பினாமிகள் அனைவரும் தி.மு.க.வினருக்கு சொந்தமானவர்கள்தான். ரத்த சொந்தமும் இருக்கிறது. இது சம்பந்தமான புகைப்படங்களும் உள்ளன.
அவர்களின் பெயர்களை வெளியிடலாமா வேண்டாமா என்பதை ஆலோசித்து வருகிறோம்.
எனது பாதயாத்திரைக்கு முன்பு இதை வெளியிட முடிவுசெய்திருக்கிறோம். பாதயாத்திரை நடக்க நடக்க அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும்" என அண்ணாமலை கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“